தமிழ்நாட்டில் தற்கொலைகளை தடுக்க, 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தமிழக அரசு தடை செய்துள்ளது. இந்த தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், ப்ரோஃபெனோபாஸ்+சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ் + சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் ஆகிய ஆறு பூச்சிக்கொல்லிகள் (பூச்சிக்கொல்லி சட்டம், 1968 இன் பிரிவு 27 இன் படி) தடை செய்யப்பட்டுள்ளது.

தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் 60 நாட்களுக்கு அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளை நிரந்தரமாக தடை செய்வது மத்திய அரசின் கையில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கை மற்றும் அபாயகரமான பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அடிப்படையில், வேளாண் துறையிடமிருந்து இந்த உத்தரவு வந்துள்ளது.
இதைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்த தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கைகளில் உள்ளது, அதற்கான கோரிக்கையுடன் மாநில அரசு அணுகும் " என்று அவர் கூறினார்.
“தற்கொலைகள் குறைந்துள்ளதா என்பதை 90 நாட்களுக்கு கண்காணிக்கவும், நிலத்தடி நிலைமையை ஆய்வு செய்யவும், மத்திய அரசுக்கு விளக்கவும் இந்த தடை உதவும்,” என்று அவர் கூறினார்.
ஆன்லைன் விற்பனையைத் தடுக்க, தமிழக அரசு இ-காமர்ஸ் இணையதளங்களில் இந்தப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கடிதம் எழுதவும் திட்டமிட்டுள்ளது.
பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ், விவசாயப் பயன்பாட்டுக்காகப் பதிவு செய்யப்படாத நிலையில், குட்டிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மூலம் மார்க்கெட் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
"தேசிய சுகாதார இயக்கம் தங்களுடைய ஆய்வில், எலிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் மாநிலம் முழுவதும் தற்கொலை மரணங்களுக்கு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளது" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் பாஸ்பரஸ் பேஸ்டை விற்பனை, இருப்பு, விற்பனை கண்காட்சி, விநியோகம் அல்லது பயன்படுத்துவதைத் தடை செய்ய ஆளுநர் முன்மொழிந்துள்ளார்.
மாட்டுச் சாணப் பொடி விற்பனையை அரசு விரைவில் தடை செய்யும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார். மாநில சுகாதாரத் துறை சார்பில், பிரத்யேக தற்கொலை உதவி மையம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுக்கு உதவவும், தீவிர நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கவும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆதரவை வழங்குவதற்கான ‘மனம்’ போன்ற சுகாதாரத் துறையின் பல்வேறு முயற்சிகள் பற்றியும், மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil