தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டது உள்ளிட்ட வழக்குகளின் கீழ் ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா, கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாகவும், கனிமொழி எம்.பி குறித்து அவதூறான வகையில் கருத்து கூறியதாகவும் தி.மு.க, காங்கிரஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகிய இயக்கங்கள் சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதில், ஈரோடு நகர் காவல் துறை, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஹெச். ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மூன்று மாதங்களில் இந்த இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு நடைபெற்றது. இதில் பெரியார் சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், தி.மு.க எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஹெச். ராஜா தரப்பில் வாதிடப்பட்டது.
வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த இரண்டு வழக்கிற்கும் இன்று (டிச 2) தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, "காவல்துறை தரப்பில் இருந்து ஹெச்.ராஜா குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இரு பதிவுகளும் ஹெச்.ராஜா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது" என நீதிபதி ஜி.ஜெயவேல் கூறினார். மேலும், ஹெச். ராஜாவை குற்றவாளி எனக் கூறி 6 மாத காலம் சிறை தண்டனை மற்றும் இரு வழக்குகளிலும் தலா ரூ. 5000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஹெச். ராஜா தரப்பில் நீதிபதியிடம், தாங்கள் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், தங்களுக்கு கால அவகாசம் வேண்டுமென்றும் கேட்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். மேலும், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அபராத தொகை உடனடியாக செலுத்தப்பட்டது. இந்த ஒரு மாத காலத்திற்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், தண்டனை அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“