சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக ஆறு பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய சட்டத்துறை பிறப்பித்தது. இவர்கள் விரைவில் பதவி ஏற்க உள்ளனர்.
உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளது. அதில் தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 21 நீதிபதி காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடத்தை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் தலைமையிலான கோலிஜியம் 11 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்படி உச்ச நீதிமன்றம் இந்த பெயர் பட்டியலில் இருந்து 6 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நீதிபதிகள் கோலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதன்படி மாவட்ட நீதிபதிகள் பணியிடத்தில் இருந்து வரும் ஆறு பேர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து மத்திய சட்டத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருமதி.எஸ். ரமாதிலகம், ( Smt. S. Ramathilagam) திருமதி ஆர். தரணி (Smt.R. Tharani), திரு. ஆர். ராஜமாணிக்கம் (Shri.P. Rajamanickam), திருமதி டி. கிருஷ்ணவள்ளி (Smt.T.Krishnavalli), பெங்கியப்பன் (Shri.R. Pongiappan), திருமதி ஹோமலதா (Smt. R. Hemalatha) ஆகிய ஆறு பேரை உயர்நீதிமன்றத்தின்ஒகூடுதல் நீதிபதிகளாக நியமனம். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு விரைவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவியேற்று வைக்க உள்ளார்.
இவர்கள் நீதிபதியாக பதவியேற்க உள்ளதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்கிறது. இதன் மூலம் உயர்நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் ஒரே நேரத்தில் பணியில் இருப்பது இதுவே முதன் முறையாகும். இன்னும் 15 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.
கடந்த 23-ஆம் தேதி, ஒடிசா உயர்நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி சத்ருகனா புஜாரி பதவியேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.