கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அனைத்து விவசாய விளை பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் மேலும் அதிகரிக்கப் படவேண்டும்

அனைத்து விவசாய அமைப்புகளின் ஆலோசனைப்படியும், பிற வல்லுனர்களின் வழிகாட்டுதல்படியும், காவிரியில் நமது உரிமைக்கான கூட்டத்தை ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்கிற தலைப்பில் களம் காணவும், போராட்ட ஒற்றுமையை உருவாக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்தார்.

அதற்கான முதல் கூட்டம் இன்று (மே 19) காலை 10.00 மணியளவில் சென்னையில் நடைபெற்றது. இதில், அன்புமணி ராமதாஸ், விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, நடிகர் நாசர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், அர்ஜுன் சம்பத், டி.ராஜேந்தர், வசீகரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், கமல்ஹாசன் நேரில் சென்று அழைத்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் பங்கேற்கவில்லை. ஆளும் கட்சியில் சார்பில் இருந்தும் யாரும் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், “இந்த கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முறையும் நோக்கமும் மிக சிறப்பாக உள்ளது.”  என கூறினார்.

தமிழக மக்கள் ஜனநாயகத் தலைவர் கே.எம்.சயிஃப் பேசுகையில், “வையான நேரத்தில் தேவையான கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசனுக்கு நன்றி” என்றார்.

அன்புமணி ராமதாஸ் பேசிய போது, “விவசாயிகளின் பிரச்சனை குறித்து குறைந்தபட்சம் 5 நாட்கள் இது போல ஆலோசனை நடத்தவேண்டும். இக்கூட்டத்தை முன்னெடுத்திருக்கும் அன்பு நணபர் கமல் ஹாசனுக்கு எனது நன்றி” என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் நாசர், “பிறந்ததில் இருந்து இந்த தமிழநாட்டின் நீரைக்குடித்து வளர்ந்தவன் என்கின்ற முறையில் எனக்கு காவிரி குறித்து பேசுவதற்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. விவசாயிகள் குரலும் தமிழக மக்களின் குரலும் வேறு வேறல்ல. இதற்கான முன்னெடுப்பை எடுத்த நண்பர் கமல் ஹாசனுக்கு நன்றி. தண்ணீர் எங்கு இருந்தாலும் அதை வைரம் போன்று விலைமதிப்பற்று பாதுகாத்திட வேண்டும்,பாட்டில் தண்ணீரைக்குடிப்பது நமது வளர்ச்சியின் குறியீடா அல்லது தோல்வியின் குறியீடா?அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து இதற்காக போராடவேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து இந்த ஆலோசனைக் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1.காவிரி குறித்து உச்ச நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

2. தமிழகத்தில் இருக்கும் தண்ணீரைப் பாதுகாக்க அனைத்து ஏரிகளையும், குளங்களையும் தூர் வார வேண்டும். மற்றும் சிற்றணைகள் /தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

3. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை பகுதியாக அமைக்க சட்டபூர்வமான முயற்சிகள் எடுக்க வேண்டும்.

4. அனைத்து விவசாய விளை பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் மேலும் அதிகரிக்கப் படவேண்டும்.

5. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு இணையாக சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் கவனித்து தீர்வு காண வேண்டும்.

6.மேலும் பல கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.இவை அனைத்தையும் கண்காணிக்கவும் செயலாற்றவும் விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். நாங்கள் அதற்காக வழிவகை செய்து, அதைத் தொடர்ந்து வழிநடத்த உதவியாக இருப்போம்”

என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close