கோவை ரயில் நிலையத்தின் வழியாக இயக்கப்படாமல் போத்தனூர், இருகூர் ரயில் நிலையங்கள் வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் ஆறு ரயில்கள் கேரளாவிற்கு இயக்கப்படுகிறது. இந்த ஆறு ரயில்களை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சார்பில் மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள கீதாகபே பகுதியில் இருந்து அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் இரு மாட்டு வண்டியில் சென்று மனு அளித்தனர். இந்த போராட்டத்தில் மாட்டு வண்டியில் சென்றவாறு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய படி வலியுறுத்தினர்.
இந்த மனு அளிக்கும் போராட்டத்தில் திமுகவினர் கைகளில் வடைகளுடன் வந்து மோடி சுட்ட வடை எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மாட்டு வண்டியில் வந்து மனு அளிக்கும் போராட்டம் காரணமாக ரயில் நிலையம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“