ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு அருகே படகு கோளாறு ஏற்பட்ட கடலில் தத்தளித்த நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை திங்கள்கிழமை இரவு பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைத்து இயந்திரப் படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா கூறுகையில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்குச் சொந்தமான ஐஎன்டி-டிஎன்-10-எம்எம்-75 என்ற பதிவெண் கொண்ட படகில் 7 மீனவர்கள் கடந்த திங்கள்கிழமை காலை ராமேஸ்வரம் ஜெட்டியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் சிறிது தூரம் சென்றதும் நெடுந்தீவு அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக படகு இன்ஜின் இயங்கவில்லை. இதையடுத்து படகு நெடுந்தீவு அருகே பாறைப் பகுதிக்குள் மிதந்து செல்லத் தொடங்கியது.
இதை கவனித்த அங்கிருந்த 2 தமிழக மீனவர்கள் படகில் இருந்தவர்களை கயிறு கொண்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 7 மீனவர்களையும் மீட்டனர். இந்நிலையில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு மீனவர்களும், இலங்கை கடற்படையினர் கடலில் ரோந்து செல்வதை கவனித்து, கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 9 பேரையும் தங்கள் கப்பலில் பத்திரமாக ஏற்றிச் சென்றனர்.
மேலும், 9 மீனவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர்களின் நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் தகவல் தெரிவித்தனர். இலங்கையில் நெடுந்தீவு போலீசாரின் காவலில் இருப்பதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
மீட்டக்கப்பட்ட 9 மீனவர்கள் அந்தோணி (35), சேசுராஜா (50), ரூபன் (24), முத்து (50), ஜான்சன் (20), லெனின் (42), பிரதிஸ் (30), ஜேக்கப் (20), அந்தோணி பிரபு (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“