Slum tenement with 24 houses collapsed in Tiruvottiyur : 90களின் முற்பாதையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டது. மொத்தமாக 336 அடிக்குமாடி வீடுகள் 4 ப்ளாக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை டி ப்ளாக், ஏற்கனவே விரிசல் விழுந்த நிலையில், இடிந்து தரைமட்டமானது. இந்த ப்ளாக்கில் 24 வீடுகளில் 200க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வந்தனர். இந்த கட்டடத்தின் நிலையை நன்கு அறிந்த அவர்கள் கவனத்துடன் இருந்து வந்தனர் என்பதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இன்று காலை விரிசல் மேலும் பெரிதாகவும் மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினர். அனைவரும் முழுமையாக வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் கட்டடம் மொத்தமாக நொறுங்கி விழுந்தது. தீயணைப்பு துறை, மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினருக்கு உடனே தகவல் அனுப்பப்பட்டது.
மக்கள் வெளியேறினாலும் அவர்கள் வைத்திருந்த எந்த பொருளும் மிஞ்சவில்லை. அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்தது. தற்போது காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கட்டடத்தின் அருகே வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
”சென்னையில் இடிக்கப்பட வேண்டிய சூழலில் மட்டும் 23 ஆயிரம் வீடுகள் உள்ளன. இவை அனைத்தும் 40 முதல் 50 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டவை. இதன் ஸ்திரத்தன்மை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சென்னையில் அமைந்திருக்கும் அனைத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளையும் ஆய்வு செய்த தரக்கட்டுப்பாட்டு பிரிவு நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது என்று குறிப்பிட்டார் அமைச்சர். திருவொற்றியூரில் இடிந்த கட்டடம் 1993-ல் கட்டப்பட்டவை. மோசமான சூழலில் இருக்கும் வீடுகளைக் கட்ட 1 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்கட்டமாக 7500 கட்டிடங்களை 2500 கோடி ரூபாய் செலவில் கட்ட உள்ளோம். அந்த பணிகளின் ஒரு பகுதியாக கோட்டூர்புரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிப்பில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு ரூ. 8 ஆயிரம் இடம்பெயர்வதற்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டது. அந்த தொகை தற்போது ரூ. 24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
அவசர அவசரமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அங்கே வசித்த மக்கள் தங்களின் பணம், நகை, சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் என முக்கியமான அனைத்தையும் வீட்டிலேயே விட்டுவிட்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. ”இரண்டு நாட்களுக்கு முன்பே விரிசல் விட்ட நிலையில் குடிசை மாற்று வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது என்றும், ஆனால் அதிகாரிகள் அப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் தி இந்துவின் ஆங்கில செய்தி தளம் குறிப்பிட்டுள்ளது.
இன்று மாலைக்குள் அவர்களுக்கு மாஉ இடம் வழங்கப்படும் என்றும் சேதங்களுக்கு ரூ. 1 லட்சம் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். தற்போது கட்டிடம் இருந்த இடத்திலேயே புதிய கட்டடம் உருவாக்கித் தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil