ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு மார்ச் மாதம் முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க ரேஷன் கார்ட் அவசியம். இதுவரை காதிகத்தில் இருந்து வந்த ரேஷன் கார்டுகளுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு உணவு வழங்கல் துறை துவக்கியது.
இந்நிலையில், வரும் மார்ச் மாதம் மூலம் ஸ்மார்ட் கார்ட் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து அவர் கூறியதாவது, “ஸ்மார்ட்கார்டு வழங்கும் பணி, 99 சதவீதம் முடிவடைந்து உள்ளது. சென்னையில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்மார்ட் கார்டுக்கு தேவையான தகவல்களை முறையாக அளிக்காததால் பணி நிறைவடைவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விடும். எனவே, வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலமே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.