கோவை பேருந்து பணிமனையில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்த போது அரசு பேருந்தில் இருந்து திடீரென புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூரில் இருந்து கோவை நோக்கி பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஒன்று, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்புவதற்காக நின்றது. பணிமனை ஊழியர்கள் டீசல் நிரப்பியதும் ஓட்டுநர் பேருந்தை இயக்க தொடங்கினார்.
அப்போது திடீரென பேருந்திலிருந்து புகை வெளியேறியதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர். மேலும், பேருந்தின் பேட்டரியில் இருந்து செல்லும் இணைப்பை துண்டித்து, டீசல் நிரப்பும் இடத்தில் இருந்து அப்புறபடுத்தினர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகளும் மற்றொரு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த அரசு பேருந்தில் ஏற்கனவே கடந்த வாரம் "ஸ்டார்டிங் மோட்டார்" பழுதாகி இருந்த நிலையில், அதை மாற்றாமல் அப்படியே இயக்கியதால் தான், புகை வெளியேறியதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.