ஒடிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கஞ்சா திருச்சியில் யாருக்காக கொண்டுவரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஒடிசாவில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் பஸ்களை மறித்து சோதனை செய்தபோது ரகசிய தகவல் கிடைக்கப்பெற்ற பஸ்ஸில் 2 பேக் மற்றும் ஒரு சூட்கேசில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் பிரபல கஞ்சா வியாபாரியான திருச்சி ராம்ஜி நகர் மலைப்பட்டி முருகன் என்ற பரிசீலி முருகன், அவரது மகன் சக்திவேல், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுலைமான் மகன் அப்துல் பாசித் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து சுமார் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு அவர்களை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் மேலும் முக்கிய புள்ளிகளுக்கு இந்த கஞ்சா கடத்தலில் தொடர் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணையின் அடிப்படையில் திருச்சியில் யார் யார் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பில் உள்ளனர் என்பதை கண்டறிந்து அவர்களையும் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். திருச்சிக்கு வந்த பேருந்தில் 20 கிலோ கஞ்சா பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்