பசிப்பினியை எதிர்த்து போராடுவது பட்டினி இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் சினேகா மோகன்தாஸ் மகளிர் தினத்தில், இன்று காலை முதல் பிரதமரின் டுவிட்டர் கணக்கை நிர்வகித்து வருகிறார். பிரதமரின் டுவிட்டர் கணக்கை நிர்வகித்து ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ள சினேகா மோகன்தாஸ் யார் அவர் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது அனைத்து சமூக ஊடகக் கணக்குகளையும் ஒரு நாள் முழுவதும் பெண்களிடம் ஒப்படைக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். பிரதமரின் சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகிக்கும் பெண்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பெண்கள் தங்கள் சாதனைகளை #SheInspiresUs என்ற ஹேஷ்டேகில் பதிவிடுமாறும் அவர்களில் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மகளிர் தினமான இன்று காலை, பிரதமர் மோடி தன்னுடைய அனைத்து சமூக ஊடகக் கணக்குகளையும் 7 சாதனைப் பெண்களிடம் ஒப்படைப்பதாகக் கூறி விடைபெற்றார். இதையடுத்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்து சாதனைப் பெண்கள் தங்களைப் பற்றிய அறிமுகத்தை பதிவிட்டு பொதுமக்களுடன் சமூக ஊடகங்களில் உரையாடி வருகிறார்கள்.
பிரதமரின் டுவிட்டர் கணக்கில் முதலில் சினேகா மோகன்தாஸ் என்ற பெண் தன்னை பற்றிய அறிமுக வீடியோவுடன் தனது கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினார்.
தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ், ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை உத்வேகமாகக் கொண்டு ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் தஞ்சமடைந்தவர்கள், வீடுகள் இல்லாமல் இருப்பவர்கள் என அனைவருக்கும் தினமும் மூன்று வேளையும் தேடிச் சென்று உணவளித்து பட்டினியை எதிர்த்து போராடி வருவருகிறார். இவர் ஃபுட் பேங்க் இந்தியா (இந்திய உணவு வங்கி) என்றா அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார்.
சினேகா மோகன்தாஸ் ஃபுட் பேங்க் மூலம் வீடற்றவர்கள், ஏழைகள், ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் இருப்பவர்கள் என தினமும் பலரின் பசியைப் போக்கி பசிக்கு எதிரான போராட்டம், பட்டினி இல்லாத நாடு என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவருகிறார். சினேகா தன்னைப் பற்றி கூறுகையில், “நான் 2015-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன். சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு இருந்து இதைச் செய்து வருகிறேன். பசியை எதிர்த்துச் சண்டையிட வேண்டும் பட்டினியில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
என் தாத்தாவின் பிறந்தநாள் அன்று சில குழந்தைகள் நலக் காப்பகத்துக்குச் சென்று உணவு வழங்கினேன். அப்படித்தான் இது தொடங்கியது. இதை இளம் தலைமுறையுடன் இணைப்பதற்கு ஃபேஸ்புக் பக்கமாகத் தொடங்கி அதன் மூலம் சில இளைஞர்களை என்னுடன் இணைத்துக்கொண்டேன். தற்போது அவர்களும் என்னைப்போலவே இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.
இதனுடைய கரு கூடுதலாக சமைப்பது ஊட்டச்சத்துடன் உடனடியாக சமைத்து வீடு இல்லாத மக்களுக்கு சூடாக உணவு அளிப்பது என்பதுதான். எங்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்களிடமிருந்து பணமாகப் பெறாமல் பொருள்களாகப் பெற்று நாங்களே சமைத்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.
சமைப்பதற்காக சில தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவி செய்கிறார்கள். அதோடு, அவர்களே உணவுகளை ஏழைகளின் இடங்களுக்குக் கொண்டு செல்லவும் உதவுகிறார்கள். அவர்களால்தான் இந்த அமைப்பு தற்போது பெரியதாகியுள்ளது. என்னுடைய வெற்றியின் மந்திரம் ‘வெற்றியைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அது வெற்றியை நிறுத்துவதில்லை’ என்று சினேகா கூறியுள்ளார்.
சினேகாவின் சேவையைப் பாராட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு சினேகா பிரதமரின் டுவிட்டர் கணக்கு வழியாக நன்றி தெரிவித்து வருகிறார். அதோடு, சிலரின் கிண்டலான கேள்விகளையும் எதிர்கொண்டு பிரதமர் கணக்கிலிருந்தே பதிலளித்து வருகிறார்.
மேலும், பிரதமரின் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு முதல் பெண்ணாக தேர்வு செய்யப்பட்டது பெருமை அளிப்பதாக சென்னையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சினேகா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ஒன்று மணிமேகலை. காப்பிய நாயகியான மணிமேகலை அட்சயப் பாத்திரம் மூலம் மக்களின் பசிப்பினி போக்குகிறாள். அந்த வகையில், சினேகா மோகன்தாஸ் நவீன மணிமேகலை என்றே கூறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"