Advertisment

பா.ஜ.க அரசின் கைப்பாவையா தமிழக போலீஸ்? சுப உதயகுமாரன் கேள்வி

'காவல்துறையை இப்படியாக இயக்குவது யார்? ஒன்றிய அரசின் கைப்பாவையாக காவல்துறை இயங்குகிறதோ என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன' என்று சுப. உதயகுமாரன் கூறியிருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Social activist SP Udayakumar

'வழக்குகளைத் திரும்பப் பெறுவோம் என்று முதல்வர் சொல்ல, தமிழ்நாடு காவல்துறை ஏன் நேர் எதிர்த்திசையில் பயணிக்கிறது?' என்று சுப. உதயகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

suba-udayakumaran: "காவல்துறை அராஜகம்" என்கிற தலைப்பில் சமூக ஆர்வலரான சுப உதயகுமாரன் தனது முகநூல் (பேஸ்புக்) பதிவில் கூறியுள்ளது பின்வருமாறு:-

Advertisment

முந்தாநாள் (செப்.16, 2023) இரவும், நேற்று (செப்.17, 2023) மதியமும் என்னுடைய வீட்டில் தமிழ்நாடு காவல்துறை தன்னுடைய அராஜக ஆட்டத்தை நடத்தியது. கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடியதற்காக மன்மோகன் சிங் அரசும், ஜெயலலிதா அரசும் சேர்ந்து என்னுடைய கடவுச்சீட்டை முடக்கினர். வங்கிக் கணக்குகளை முடக்கினர். அதன் மூலம் என்னுடைய வருகைதரு பேராசிரியர் வேலையை, வருமானத்தை முடக்கினர். மேலும் கடந்த 07.01.2013 அன்று தமிழ்நாடு காவல்துறை என்னை “தேடப்படும் குற்றவாளி” என்று அறிவித்து Look Out Circular ஒன்றை வெளியிட்டது.

மதுரை மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் மற்றும் அவரது உதவியாளர் வழக்குரைஞர் சீனி செய்யது அம்மா அவர்கள் ஆகியோரின் உதவியுடன் ஒரு மிக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி என்னுடைய கடவுச்சீட்டை கடந்த ஆண்டு மீட்டோம்.  ஆனாலும் “உலகமகா தீவிரவாதியாக” என்னைப் பார்க்கும் ஒன்றிய அரசு ஓராண்டு கடவுச்சீட்டை மட்டுமே எனக்களித்தது.

கடவுச்சீட்டேக் கிடைத்த பிறகு, நிலுவையில் இருக்கும் LOC-யை நீக்குங்கள் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பளர்களுக்கு இரண்டு முறை கடிதங்கள் எழுதினேன். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், நான் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தலையீட்டை நாடினேன். என்னுடைய 05.07.2023 கடிதத்தை இரண்டு வாரங்களுக்குள் பரிசீலிக்கும்படி மாண்புமிகு நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறையைக் கேட்டுக்கொண்டது.

LOC-யை நீக்க முடியாது என்று குறிப்பிட்டு தமிழ்நாடு காவல்துறை ஒரு கடிதத்தை அவசரம் அவசரமாக எழுதி, முந்தாநாள் (செப். 16) இரவு பத்து மணியளவில் சில காவலர்களை என்னுடைய வீட்டுக்கு அனுப்பியது. நான் கையெழுத்துப் போட்டு வாங்க மாட்டேன் என்று மறுத்துவிட்டேன். இரவு 11:00 மணி வரை இந்தப் போராட்டம் நடந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூடினர்.

நேற்று (செப். 17) மதியம் காவலர்கள் சிலர் எங்களுடைய கிராம நிர்வாக அதிகாரியையும் அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்தனர். கடிதத்தைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களின் பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொல்லிவிட்டு, நான் பெறுவதற்கு மறுத்தேன். என் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஒட்டுவோம் என்றார்கள். என் வீட்டுச் சுவரில் ஒட்டக்கூடாது, சாலையில் போய் ஒட்டுங்கள், அல்லது பதிவு அஞ்சல் வழியாக அனுப்புங்கள் என்றேன் நான்.

காவல்துறை அழைப்பாணையை, பிடி வாரண்டை ஏற்க மறுத்தால் சட்டப்படி வீட்டுச் சுவரில் ஒட்டுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எஸ்.பி.யின் கடிதத்தைப் பெற மறுத்தால் அதனை உன் சுவரில் ஒட்டுவோம் என்பது ஓர் அராஜகச் செயல்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, வள்ளியூரில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஐயா ஸ்டாலின் அவர்கள் கூடங்குளம் போராளிகள் மற்றும் பொதுமக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் “அனைத்தும்” திரும்பப் பெறப்படும் என்று பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்தார். அவர் முதல்வராகப் பதவியேற்றதும் அவரை மூன்று முறை சந்தித்து வழக்குகளை திரும்பப் பெறக் கேட்டுக்கொண்டேன். சட்டமன்றத் தலைவர் ஐயா அப்பாவு அவர்களை தோழர்களும் நானும் நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். கடந்த ஜூலை 18, 2023 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து விண்ணப்பம் ஒன்றைக் கொடுத்தேன்.

ஆனாலும் வழக்குகள் அப்படியே இருக்கின்றன. எங்கள் பகுதி மக்கள் கடவுச்சீட்டுப் பெற முடியவில்லை. வேலைதேடும் இளைஞர்கள் காவல்துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெற இயலவில்லை. இன்னும் எத்தனைக் காலம் நாங்கள் இப்படித் துன்புற வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார்?

வழக்குகளைத் திரும்பப் பெறுவோம் என்று முதல்வர் சொல்ல, தமிழ்நாடு காவல்துறை ஏன் நேர் எதிர்த்திசையில் பயணிக்கிறது? தமிழ்நாடு காவல்துறையை இப்படியாக இயக்குவது யார்? ஒன்றிய அரசின் கைப்பாவையாக காவல்துறை இயங்குகிறதோ என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன.

தி.மு.க, அ.தி.மு.க அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது பல கோடி ரூபாய் ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர்களில் யாரும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படாத நிலையில், நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக உழைக்கும் நானும், என்னுடைய தோழர்களும் மட்டும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவது ஏன்?

கூடங்குளத்தில் 670 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பத்து நாட்களாக கடலில் கிடந்து துருப்பிடிக்கின்றனவே? இது தவறான தகவலா? இதை சமூக ஊடகங்கள் மூலம் வெளியுலகுக்குச் சொல்வது எந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகிறது?

இவற்றையெல்லாம் யாரிடம் கேட்பது? யார் பதில் சொல்வார்கள்? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களிடம் செல்வதைத்தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு சுப. உதயகுமாரன் பதிவிட்டுள்ளார். 

https://www.facebook.com/profile.php?id=100074102601540

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 


                  
                
              
Suba Udayakumaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment