சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு செய்வது பெண்ணை மானபங்கம் செய்வதாகாது

இணைய தளத்தின் அவதூறு கருத்து பதிவு செய்வது பெண்ணின் மானத்திற்கு பங்கம் ஏற்படுத்தியது ஆகாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

Chennai high court

இணைய தளத்தின் அவதூறு கருத்து பதிவு செய்வது பெண்ணின் மானத்திற்கு பங்கம் ஏற்படுத்தியது ஆகாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இதுசம்பந்தமாக இருவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் கார்த்திகா பிரியதர்ஷினி. ஆயத்த ஆடை உற்பத்தியகம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தன்னை பங்குதாரராக சேர்க்காததால், கார்த்திகாவுக்கு எதிராகவும், அவரது நிறுவனத்திற்கு எதிராகவும் இணைய தளத்தில் அவதூறு கருத்து பதிவு செய்ததாகவும், அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அருண் மற்றும் ராமசாமி ஆகியோர் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், இவர்கள் இருவர் மீதும் பெண்ணின் மானத்திற்கு பங்கம் விளைவித்தது, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அருண், ராமசாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பெண்ணின் மானத்திற்கு பங்கம் ஏற்படுத்துவது என்பது, பொது இடங்களில் பெண்களை பார்த்து தவறான வகையில் சைகை செய்வது, ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்களை, குறுந்தகவல்களை அனுப்புவது தான். இந்த வழக்கில் அவதூறு கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதால், அது பெண்ணின் மானத்திற்கு பங்கம் ஏற்படுத்துவது ஆகாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் நேரடியாக விசாரணை நடத்துவதற்காகவே இந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, இருவர் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Social media post is not molestation says chennai high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com