/indian-express-tamil/media/media_files/2024/12/09/gYvU18ZgLqCGMKFIobUu.jpg)
கோவை மத்திய சிறையில், தண்டனைக் கைதி ஒருவர் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் ஆட்டோவை உருவாக்கி அசத்தி உள்ளார்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). கொலை வழக்கு தொடர்பாக, சேலம் அழகாபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிறையில் தொழிற் கூடத்தில் பணியாற்றி வருகிறார்.
இதுதவிர கிடைக்கும் சாதனங்களைக் கொண்டு பயன்பாடு உள்ள பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர். இவர் சில மாதங்களுக்கு முன்னர் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் ஆட்டோவை வடிவமைத்து உள்ளார்.
இதுகுறித்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முக சுந்தரம் தகவலாகக் கூறியதாவது, சிறைவாசியான யுக ஆதித்தன் சோலார் ஆட்டோவை உருவாக்கி உள்ளார். ஆட்டோவின் மீது சூரிய ஒளி உற்பத்திக்கான தகடு அமைக்கப்பட்டு உள்ளது. ஆட்டோவில் ஓட்டுநரின் இருக்கைக்கு அடியில், இதற்கான பேட்டரி உள்ளிட்ட கட்டமைப்புகள் பொருத்தப்பட்டு உள்ளன.
சூரிய மின்சக்தி மூலம் ஒருமுறை பேட்டரி முழுவதுமாக நிரம்பினால், 200 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக ஓட்டலாம். 35 கி.மீ. வேகத்தில் ஆட்டோவை ஓட்டலாம். இதில் ஓட்டுநர் உட்பட 8 பேர் வரை அமர்ந்து செல்லலாம். எல்.இ.டி விளக்கு, ஹாரன், ஹேன்ட் பிரேக், டேப் ரிக்கார் போன்ற வசதிகள் உள்ளன.
சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆட்டோ நல்ல முறையில் உபயோகமாகிறது. இதன் தயாரிப்பு செலவு ரூ.1.25 லட்சம் ஆகும். இதுபோல், மேலும் 2 ஆட்டோக்கள், ஓர் ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று தகவல் தெரிவித்து உள்ளார்.
மேலும், தற்போது இந்த ஆட்டோ கோவை மத்திய சிறையின் உட்புறத்தில் சமையற் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோதனைப் பயன்பாடு முடிந்தவுடன், சிறைக்கு கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களில் வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் அமர்ந்து நுழைவு வாயிலில் இருந்து பார்வையாளர் அறைக்கு அழைத்துச் செல்ல இந்த ஆட்டோ பயன்படுத்தப்படும் என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.