சென்னையில் சூரிய கிரகணத்தை குறித்து திராவிடர் கழகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் உணவு சாப்பிடக்கூடாது என்ற மூட நம்பிக்கையை உடைக்கும் விதத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, உணவு சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் கூறுவது மூடநம்பிக்கை என்று இந்நிகழ்ச்சியில் கூறினர்.
“இயற்கையையும், அறிவியலையும் நம்பவேண்டும்; மூடநம்பிக்கையை நம்பி ஏமாறக்கூடாது. கருவுற்ற பெண்களுக்கு அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் பொய் என்று நிரூபிக்க ஒரு எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறோம்” என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
“இந்நிகழ்ச்சியில் அனைவரும் சிற்றுண்டியை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் சாப்பிடுவதற்காக காரணம் எண்களின் கொள்கையை வலியுறுத்துவதாகத் தான். மூட நம்பிக்கைகளை உடைப்பதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம். சாதி மறுப்பு திருமணம் நடத்தவேண்டும் என்றாலும் செய்து வைப்போம். இப்படி செய்வதே சுயமரியாதை வாழ்வு, சுகவாழ்வு என்பதற்கு பொருளாக மக்களுக்கு காட்டுகிறோம்”, என்று திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறுகிறார்.
மேலும், ராமர் பாலத்தைப் பற்றி பேசிய அவர், “இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே ராமர் பாலம் கட்டியிருந்தால், அதை யாராலும் உடைத்திருக்க முடியாதே. அதுபோக, ராமர் அப்பாலத்தை கட்டியிருந்தால் அனுமன் பாலம் வழியாகவே லங்கைக்கு சென்றிருக்கலாமே? ஏன் லங்கைக்கு பறந்து செல்ல வேண்டும்”, என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே சூர்யா கிரகணம் எந்த விதத்திலும் மனித இனத்தை பாதிக்காது என்ற கருத்தை வலியுறுத்தி, கோவை மாவட்டம் அன்னுரை அடுத்த நல்லிசெட்டிபாளையத்தில் பொதுமக்களிடையே திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் கோழிக்கறி குழம்பு செய்து பரிமாறி சாப்பிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil