கடலூர் ஆனகுப்பத்தில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன்(60). ஓய்வுபெற்ற துணை ஆட்சியரான இவர், தனது மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
பொறியியல் பட்டதாரியான கார்த்திக்(32), வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். அவ்வப்போது, குடிக்க பணம் கேட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
அந்த வகையில், திங்கட்கிழமை காலை, மீண்டும் இருவருக்கும் இடையே குடிக்க பணம் கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், இரும்பு கம்பியை எடுத்த கார்த்திக், சுப்பிரமணியனைப் தொடர்ச்சியாக பலமாகத் தாக்கியுள்ளார். இதில், அவர் சுயநினைவு இழந்து கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து, கார்த்திக் தனியார் ஆம்புலன்ஸ் ஏஜேன்சியை தொடர்பு கொண்டு ஃப்ரீசர் பாக்ஸ் வேண்டும் என கேட்டுள்ளார். உடனடியாக ஃப்ரீசர் பாக்ஸூடன் வீட்டிற்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் , இறந்த உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து, காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதற்கிடையில், அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டது குறித்து கார்த்திக்கிடம் கேட்கையில், அவர் ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை
இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில், அவர் தான் கொலை செய்தது உறுதியானதும் கைது செய்தனர்.
உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மற்ற இரண்டு மகன்களும் பெங்களூர் மற்றும் சென்னையில் வசிக்கின்றனர். அவரது மகள் லண்டனில் குடியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil