மறைந்த முன்னாள் முதலமைச்சர், தி.மு.க தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தி.மு.கவில் உள்ள அணிகள் சார்பில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடத்தப்படுகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று(அக்.14) மாலை 4.30 மணியளவில் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க மகளிர் அணி தலைவியும், எம்.பியுமான கனிமொழி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கிறார். தி.மு.க தலைவர், முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
நிகழ்ச்சிக்கு சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள பெண் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று இரவு 11 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று புத்தகம் வழங்கி வரவேற்றார். சோனியா 5 ஆண்டுகளுக்குப் பின் சென்னை வந்துள்ளார்.
அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் நேரில் வரவேற்றனர்.
பெண் தலைவர்கள் வருகை
மேலும் மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி., ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சுஷ்மிதா தேவ், பீகார் மாநில உணவுத்துறை அமைச்சர் சமாஜ்வாடி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி துணை சபாநாயகர் ராக்கி பிட்லான், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மகளிரணி பொதுச்செயலாளர் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய அரசியல் குழு உறுப்பினர் சுபாஷினி அலி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“