மின் இணைப்பு எண்-ஆதார் எண் இணைக்கும் போது ஆதார் நகல் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக நுகர்வோர்கள் சிரமம் தெரிவித்த நிலையில், செயல்முறையை எளிதாக்க OTP மூலம் இணைக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மின்வாரியத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இ.பி – ஆதார் எண் இணைப்பை எளிதாக மாற்றம் கொண்டு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது,
மத்திய அரசின் UIDAI ஒப்புதலுடன், ஓ.டி.பி முறை ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஆதார்- இ.பி இணைப்பில் ஆதார் நகல் இல்லாமல் ஓ.டி.பி முறையில் இணைக்கும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சோதனை முடிந்ததும், விரைவில் நுகர்வோர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இந்த வசதி மூலம் ஆதார் இணைக்க, பயனர்கள் தங்கள் மின் நுகர்வோர் அட்டை மற்றும் ஆதார் அட்டை இரண்டிலும் ஒரே மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினர்.
தற்போது, மின் நுகர்வோர் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் ஓ.டி.பி பெறப்பட்டு ஆதார் இணைக்கப்படுகிறது. ஆதார் அட்டை எண், பெயர் பதிவிட்ட பிறகு நுகர்வோர் சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை நகல் பதிவேற்றம் செய்ய வேண்டும். நுகர்வோர் சமர்ப்பித்த விவரங்கள் அந்தந்த பிரிவு அலுவலகத்தின் உதவி பொறியாளரால் சரிபார்க்கப்பட்டு அவை அங்கீகரிக்கப்படும்.
இந்தநிலையில், முகம் தெரியும் படி ஆதார் நகல் சமர்பிப்பது குறித்து சமூக ஊடகங்களில் பலர் கவலை தெரிவித்தனர். பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். வாடிக்கையாளர்கள் பலர் ஆதாருக்கு மாற்றாக ஓ.டி.பி முறை/கைரேகை முறை பயன்படுத்தலாம் எனக் கூறி பதிவிட்டனர். இதையடுத்து, மின்வாரியம் தற்போது புதிய முறையை சோதனை செய்து வருகிறது.
என்.ஆர்.ஐ ஆப்ஷன்
ஆதார்- இ.பி இணைக்கும் போது, 3 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவை. 1. நீங்கள் இந்த மின் இணைப்பின் உரிமையாளர் 2. வாடகைதாரர் 3. உரிமையாளர் ஆனால் பெயர் மாற்றப்படவில்லை எனக் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதார் இணைக்க வேண்டும். இந்நிலையில் 4-வதாக வெளிநாட்டில் இருக்கும் மகன்/மகளுக்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் பெற்றோர் அல்லது உறவினர்கள் தங்களுடைய ஆதாரை இணைக்க வசதியாக ஒரு ஆப்ஷன் கொண்டு வருவது குறித்து கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், உறவினர் என ஆப்ஷன் கொண்டு வரப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil