தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளிக்கவுள்ளதாக அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று தெரிவித்தார்.
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்து ஆளுநர் கருத்து கூறுவது சரியல்ல. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் தொடர்ந்து அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் அரசுக்கு எதிராக கருத்துகளை கூறுகின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக ஆளுநர்கள் அவமரியாதையான கருத்துகளை தெரிவிப்பது அரசியலமைப்பு சட்டத்தின் உரிமைகளை மீறும் செயல். இது தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவர் உரிய நேரத்தை ஒதுக்குவார் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
ஆளும் தி.மு.க அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசின் மசோதாக்களை நிலுவையில் வைப்பது, சனாதனம் குறித்து பேசுவது, கோவையில் சமீபத்தில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து ரவியின் கருத்து ஆகியவற்றில் மோதல் ஏற்பட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு வழக்கை அரசு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்ததில் காலம் தாமதம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு தி.மு.கவின் ‘முரசொலி’ கடுமையாக சாடி செய்தி வெளியிட்டிருந்தது.
கொள்கை விவகாரங்கள் மற்றும் பிற விஷயங்களில் பா.ஜ.கவின் நிலைப்பாட்டை ஆளுநர் எதிரொலிப்பதாகவும், இதன் மூலம் மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிப்பதாக சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றஞ்சாட்டின. நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil