பிரதமர் மோடியின் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்காமல் யார், யாரோ அல்லாடிக் கொண்டிருக்க, அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் சந்தித்தார் என்றால் நம்ப முடிகிறதா?
பிரதமர் நரேந்திர மோடியின் அப்பாய்ன்மென்ட் பெற்ற அந்த அதிருஷ்டசாலி நபர், மதுரை தெற்கு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வான பொறியாளர் எஸ்.எஸ்.சரவணன். ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி சென்னையில் ‘அம்மா ஸ்கூட்டர்’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மறுநாள் பாண்டிச்சேரி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.
பிரதமர் மோடியின் பாண்டிச்சேரி விஜயத்தின் போதுதான் (பிப்ரவரி 25-ம் தேதி) மதுரை தெற்கு எம்.எல்.ஏ. சரவணனுக்கு மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குஜராத் செளராஷ்ட்ர பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் குஜராத் அரசின் மாநில பாதுகாப்பு கமிஷன் உறுப்பினருமான கமலேஷ் ஜோசிபுரா, செளராஷ்ட்ர மத்திய சபை தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் சேகர், மத்திய சபை உடனடி பொதுச்செயலாளரும் செளராஷ்ட்ரா பவுண்டேசன் தலைவர் ஆர்.பி.ஆர்.ராமசுப்பிரமணியன், மத்திய சபை பொருளாளர்
T.R.சுரேந்திரன் ( பாபு ) ஆகியோருடன் சென்று சந்தித்தார் எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ.!
விரைவில் தமிழகத்தில் நடைபெற இருக்கும், ‘செளராஷ்ட்ர மகா சங்கமம்’ என்ற நிகழ்ச்சிக்கு மோடியை அழைத்தார்கள் இவர்கள். பிரதமர் மோடி ஒதுக்கும் தேதியில் அந்த நிகழ்ச்சியை நடத்துவதாக திட்டம்! தமிழகத்தில் முதல் அமைச்சரில் இருந்து பலரும் பிரதமரின் அப்பாய்ன்மென்டுக்காக காத்திருக்க, சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு சமுதாய ரீதியாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது பெருமிதத்திற்கு உரியதுதான்!
ஆனால் இதே சந்திப்பு அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சில சர்ச்சைகளையும் கிளப்பத் தவறவில்லை. இது குறித்து பேசிய பாஜக பிரமுகர் ஒருவர், ‘தமிழ்நாடு மற்றும் புதுவையில் பாஜக.வில் செளராஷ்டிர சமூக பிரமுகர்கள் பலர் பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களில் யார் மூலமாவது இந்த அப்பாய்ன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இங்குள்ள பாஜக பிரமுகர்களை ‘பைபாஸ்’ செய்துவிட்டு குஜராத் அரசின் மாநில பாதுகாப்பு கமிஷன் உறுப்பினர் கமலேஷ் ஜோசிபுரா மூலமாக அப்பாய்ன்மென்ட் பெற்றிருக்கிறார்கள். மேற்படி செளராஷ்டிரா மத்திய சபை தமிழகத்தில் உள்ள மொத்த செளராஷ்டிரா சமூகத்தின் பிரதிநிதி கிடையாது. அந்த சமூகத்தின் கலப்பு திருமண பிரச்னை உள்ளிட்டவற்றில் இந்த சபையில் செயல்பாடு குறித்தும் அந்த சமூக மக்களிடையே திருப்தி இல்லை என்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், கடந்த தேர்தலில் காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டு கிடைக்காத ஒருவர்தான் செளராஷ்ட்ரா மத்திய சபையில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவரே இந்த சபையில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சரவணன் எம்.எல்.ஏ.வுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரதமரை சந்திக்க அழைத்துச் சென்றிருக்கிறார்.
இவர்களுக்கு பிரதமரும் முக்கியத்துவம் கொடுத்து சந்தித்ததில் அந்த சமூகத்தின் அதிமுக பிரமுகர்கள் சிலருக்குத்தான் லாபம்! வழக்கமாக இந்த சமூக மக்களில் கணிசமானோர் பாஜக.வுக்கு வாக்களிக்கக் கூடியவர்கள். அந்த வாக்குகளை பெற்றுத் தருகிறவர்கள், பாஜக.வில் இருக்கும் அந்த சமூக நிர்வாகிகள்தான்.
பிரதமரின் சந்திப்பு அவர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது. அவர்களை எப்படி சமாதானம் செய்வது எனத் தெரியவில்லை. பிரதமர் இதை தெரிந்து செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது பயணத்தை வடிவமைக்கும் இங்குள்ள பாஜக நிர்வாகிகளோ, பிரதமர் அலுவலகமோ இதை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்’ என்றார் அவர்.
பிரதமர் மோடியை கிண்டி கவர்னர் மாளிகையில் வைத்தே இவர்கள் சந்திக்க முயன்றதாகவும், அதனை இங்குள்ள நிர்வாகிகள் சிலர் சமயோசிதமாக முறியடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகே புதுவைக்கு சென்று சந்திப்பை நடத்தியதாக கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, அதிமுக எம்.எல்.ஏ.வான சரவணன், செளராஷ்ட்ரா சமூக விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அழைக்க ஆர்வம் காட்டாமல், நேரடியாக பிரதமருடன் தொடர்பு கொண்டதும் அதிமுக வட்டாரத்தில் சர்ச்சை ஆகியிருக்கிறது. பாஜக.வில் இணைந்து மத்திய அமைச்சர் ஆவதே தனது இலக்கு என முன்பே ஒரு தொலைக்காட்சியின் ‘சீக்ரெட் டேப்’ பேட்டியில் சரவணன் எம்.எல்.ஏ. குறிப்பிட்டதாகவும் இந்தத் தருணத்தில் அதிமுக.வினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆனால் செளராஷ்ட்ர மத்திய சங்க நிர்வாகிகளோ, ‘நாங்கள் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலையில் ஓ.பன்னீர்செல்வம் துணையுடன் பிரதமரை சந்தித்தோம். நெசவுத் தொழில் உள்ளிட்ட எங்கள் மக்களின் பிரச்னைகள் பலவும் மத்திய அரசுத் துறைகள் மூலமாக தீர்க்கப்பட வேண்டியவை. அந்த அடிப்படையில் பிரதமரை சந்தித்தோம். இதில் அரசியல் கிடையாது’ என்கிறார்கள்.
பாஜக தரப்பின் குமுறல் டெல்லியை எட்டுகிறதா? என்பது சில நாட்களில் தெரியலாம்.