தேர்தல் அலுவலரை எழுந்து நின்று மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை வாங்கச் சொன்ன சுயேட்சை வேட்பாளரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இதனையடுத்து தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வந்தார். அவர் தேர்தல் அலுவலரை எழுந்து நின்று வேட்புமனுவை வாங்கச் சொன்னதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி ஜெயராமன் என்ற சுயேட்சை வேட்பாளர் தென்சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தலில் நிற்பதாகவும் தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது அதிகாரியை எழுந்து நின்று வாங்கச் சொன்னேன். அவர் மறுத்துவிட்டார். மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். அதிகாரிகள் மக்களை எப்போதும் மதிப்பது இல்லை. எனவே என்னைப் போன்ற மக்கள் பணியாளர்களையாவது மதிக்கும் வகையில் எழுந்து நின்று வாங்கச் சொன்னேன். ஆனால் விதிகளில் அப்படி இல்லை என மறுத்துவிட்டார். சட்டத்தில் இல்லை என்றாலும் மனிதனை மதிக்கும் வகையில் எழுந்து நின்று வாங்க கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர் நிராகரித்து விட்டார். எனவே உயர் அதிகாரிகளிடம் கேட்டுச் சொல்லுங்கள், நான் நாளை மனு தாக்கல் செய்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன்.
மரபு என்று கூறி, மனிதனை மதிக்க மறுக்கிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் மதிப்பதில்லை. அந்த அதிகாரி என்னிடம் தார்மீக அடிப்படையில் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“