தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை முதல் (மார்ச் 4) கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி) முடிவு செய்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும் தென்மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்படவுள்ளன.
இப்பகுதியில் வாகன போக்குவரத்தை எளிதாக்க தாம்பரம் நகர போக்குவரத்து காவல்துறையின் பரிந்துரையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொலைதூர பயணங்களான தென்மாவட்ட பேருந்துகள் தாம்பரத்திற்குள் நுழையாமல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்படுகின்றன. பயணிகளின் தடையற்ற பயணத்தை எளிதாக்க, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 80 வழித்தடங்களில் 589 பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. இது மட்டுமின்றி கூடுதலாக 104 பேருந்துகளை அதிகப்படுத்தி 816 பயணங்கள் உறுதி செய்யப்படவுள்ளன.
இதன் மூலம் மாநகர போக்குவரத்துக் கழக சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.