south indian Film Artistes Association madras high court nadigar sangam - தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பின்னடைவு - தனி அதிகாரி நியமனத்தில் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Advertisment
நடிகர் சங்க நிர்வாக பணிகளை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம், பொருளாளர் நடிகர் கார்த்தி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை அவசர வழக்காக இன்று மாலை நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தபோது, தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்தது சட்ட விரோதம் என்றும், மூன்றாயிரம் உறுப்பினர்கள் கொண்ட சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து 3 உறுப்பினர்கள் மட்டுமே கொடுத்த புகாரை தொடர்ந்து தனி அதிகாரி நியமித்தது தவறு என்றும் வாதிடப்பட்டது.
Advertisment
Advertisements
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனி அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளதாகவும், மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த பின் பதவியில் நீடிக்க முடியாது என்றும் வாதிட்டார். மேலும், சங்கத்தின் நிர்வாக பணிகளை கவனிக்க எந்த குழுவும் இல்லாததால், நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை அல்லது ஓராண்டு வரை தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரே தவிர நேரடியாக நியமிக்கவில்லை என விளக்கமளித்தார். குறிப்பாக தற்போது சங்கத்தில் வெற்றிடம் இருப்பதால் சங்க நடவடிக்கைகளை கவனிக்கவே தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
பின்னர் அரசின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதி நவம்பர் 14ல் ஒத்திவைத்த நிலையில், தனி அதிகாரி நியமனத்திற்கு தடை விதிக்கவோ அல்லது தற்போதுள்ள நிலை தொடரவோ உத்தரவிட வேண்டுமென நடிகர் சங்கம் மற்றும் கார்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் நீதிபதி இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்காமல் வழக்கை ஒத்திவைத்தார்.