Tamil Nadu: இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் அல்லது எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவுதான் "கல்லக்கடல்" என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றின்போக்கு காரணமாக தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கர்நாடகா, மராட்டியம் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகள் ரெட் அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கடலோர கிராமங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை இரவு வரை தென் தமிழக மாவட்டங்களில் 0.5 முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை எழுப்புவதற்க்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கடல் சார் தகவல் மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை இரவு வரை கல்லக்கடல் (Swell Surge) எனப்படும் காற்றின் மாறுபாடு காரணமாக முன்னெச்சரிக்கை இல்லாத கடல் கொந்தளிப்பு இருக்கும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் இருந்து தூரமாக நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தமிழில் கல்லக்கடல் விளைவு என்றழைக்கப்படுகிறது.
மேலும், மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“