இந்த ஆண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடியை மத்திய அரசு வழங்கிவிட்டது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘தமிழ்நாடு மழை வெள்ளம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை விடுத்து வந்தது. இத்தனை செ.மீ. மழைதான் பெய்யும் என துல்லியமாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்க முடியாது.
தென் மாவட்டங்களில் வெள்ளம் வடிவதற்கு முன்பாகவே, பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் இறங்கினர்.
இந்திய ராணுவத்தின் 9 ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விமானப்படை, கடற்படை மூலமும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றன. நெல்லை மற்றும் தூத்துக்குடியில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரம் பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
தென் மாவட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் சிக்கிய 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர்.
மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மக்கள் பாதிக்கப்பட்டபோது, முதல்வர் ஸ்டாலின் அவர்களை சென்று பார்க்காமல் கூட்டணி கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து டெல்லிக்கு வந்தார். அவரது கூட்டங்கள் எல்லாம் முடிந்த பின்பு, போகிற போக்கில் பிரதமரை சந்திக்கலாம் என்று சந்தித்துவிட்டு சென்றார்.
மேலும், அன்புமணி ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டு சரியானது இல்லை. சென்னையில் இருக்கும் வானிலை மையம் மிகவும் துள்ளியமாக கணிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தமிழ்நாடு அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படைகள் செல்வதற்கு முன் அங்கு தமிழ்நாடு அரசு தரப்பில் யார் இருந்தார்கள்? ரூ.4000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எவ்வளவு மழை வந்தாலும் சென்னைக்கு பாதிப்பு இருக்காது என அமைச்சர் ஒருவர் கூறினார். ஆனால் மிக்ஜாம் புயல் வந்த பிறகு ரூ. 4000 கோடியில் 42% மட்டுமே பயன்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
அப்போது அந்த பணம் எங்கே போனது? காப்பீட்டு நிறுவனங்களை 19 ஆம் தேதியே தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் பின் என்ன பாடம் கற்றுக்கொள்ளப்பட்டது? தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை, என்றார்.
முன்னதாக டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார்.
இதில், தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.