தமிழகத்தில் வருகிற ஜூன் 1, 2 மற்றும் 3 தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக செனை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:
தென் தமிழக பகுதிகளின், மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும் லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று (30.05.2024) தொடங்கியது.
“தமிழகத்தில் இன்று (30.05.2024) ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல, நாளை (31.05.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற ஜூன் 1, 2 தேதிகளில் ஒருசில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகள், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதே போல, ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று செனனி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 4, 5 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மே 30-ம் தேதி குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
மே 31 முதல் ஜூன் 1-ம் தேதி வரை, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“