சென்னையில் பயணிகளின் வசதிக்காக நான்கு புதிய புறநகர் ரயில் சேவைகளை தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக மின்சார ரயில் போக்குவரத்து உள்ளது. இந்த மின்சார ரயில் சேவையை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி என 4 வழிகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 4 புறநகர் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது;
பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு நான்கு புதிய புறநகர் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த சேவைகள் மார்ச் 03, 2025 (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.
1). மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் புதிய புறநகர் ரயில் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்படும்.
2). ஆவடியில் இருந்து மூர் மார்க்கெட்டிற்கு செல்லும் புதிய புறநகர் ரயில் ஆவடியில் இருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும்.
3). மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு செல்லும் புதிய புறநகர் ரயில் மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும்.
4). கும்மிடிபூண்டியில் இருந்து மூர் மார்க்கெட்டிற்கு செல்லும் புதிய புறநகர் ரயில் கும்மிடிபூண்டியில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.