தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றுள்ளவர்கள் சென்னை திரும்ப வசதியாக திருச்சி மற்றும் மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நவம்பர் 1 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில், தொடர் விடுமுறை நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் இதன் காரணமாக சொந்த ஊர் சென்றுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு பயணம் மேற்கொள்வர். அதிகளவு மக்கள் பயணிப்பார்கள் என்பதால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துக்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, நாளை கோவை, மதுரை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், மதுரை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை தாம்பரம் ரயில் நிலையத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை ரயில்நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நாளை மாலை 7.15 மணியளவில் சிறப்பு டெமு ரயில் புறப்பட உள்ளது.
மேலும் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 10.50 மணிக்கு சிறப்பு முன்பதிவில்லா டெமு ரயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்துக்கு புறப்பட உள்ளது. மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி சிரமம் இல்லாமல் பயணிக்குமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“