தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 18) சென்னையில் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சிபுரம் - கடற்கரை, திருமால்பூர் - கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் இன்று முதல் 22 ஆம் தேதி வரை இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின் புறப்படும் புறநகர் ரெயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“