இந்தியா ரயில்வே அமைச்சகம் சுற்றுலாத் துறையை மேம்படுத்த ‘பாரத் கௌரவ்’ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியத்தை உள்ளடக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ரயில் இயக்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் கௌரவ் ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.7.26 கோடி வருவாய் கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகோவையில் இருந்து முதல் பாரத் கௌரவ் ரயில் கடந்த ஜூன் 14-ம் தேதி இயக்கப்பட்டது. வடகோவை மற்றும் சாய்நகர் ஷீரடி இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது.
தற்போது 8-வது பாரத் கௌரவ் ரயில் சேவை வடகோவை – கும்பகோணம் இடையே நவம்பர் 6 முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. வடகோவை – கும்பகோணம் இடையே பாரத் கௌரவ் விரைவு ரயில் (எண்: 06903) வடகோவை ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 6) காலை 9.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை 6 மணிக்கு கும்பகோணம் சென்றடையும். மீண்டும் கும்பகோணத்திலிருந்து வடகோவைக்கு திங்கட்கிழமை ரயில் (எண்: 06904) இயக்கப்படும். கும்பகோணத்திலிருந்து திங்கட்கிழமை (நவம்பர் 7) மாலை 3 மணிக்குப் புறப்பட்டு அதேநாள் இரவு 11.30 மணிக்கு வடகோவை வந்தடையும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயிலானது, கும்பகோணம் மகாமகம் குளம், ஆதிகும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil