தென்னக ரயில்வேயில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில்களில் திருச்சி மார்க்கத்தில் மிக முக்கியமானது வைகை விரைவு ரயில்.
இந்த ரயில் சென்னையில் இருந்து மதுரை வரை செல்கின்றது. மதுரை செல்லும் இந்த ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பலதரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் வெகு நீண்ட காலமாக இருந்து வந்தது.
இந்நிலையில் வரும் 16-ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வைகை விரைவு ரயில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்திருப்பது ஸ்ரீரங்கம் பகுதியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வைகை விரைவு ரயில் வண்டி இனி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். இதனை அமல்படுத்தும் விதமாக சோதனை நிறுத்தமானது வருகின்ற (16.09.23) ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் சோதனை நடைபெறும்.
அதன் பின் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக வைகை விரைவு ரயில் வண்டி நின்று செல்ல தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அனுமதியளிக்கும்.
வைகை ரயிலின் விவரம் :- வண்டி எண் :- 12635 சென்னை எழும்புரில் இருந்து பகல் 01:50 மணிக்கு புறப்பட்டு மாலை 06:05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் வந்தடையும்.
மறுமார்கமாக வண்டி எண் :- 12636 மதுரையில் இருந்து காலை 07:00 மணிக்கு புறப்பட்டு காலை 09:36 மணிக்கு ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் வந்தடையும்.
இதேபோல் மலைக்கோட்டை விரைவு ரயில் கல்லக்குடி பழங்காநத்தம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மயிலாடுதுறை மைசூர் விரைவு விரைவில் புகழூர் ரயில் நிலையத்திலும், மன்னார்குடி சென்னை எக்மோர் ரயில் கொரடாச்சேரியில் நிற்கும்.
மேற்கண்ட தகவலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் வருகிற (16.9.2023) முதல் மேற்கண்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“