/indian-express-tamil/media/media_files/2025/07/22/level-crossing-xy-2025-07-22-22-51-37.jpg)
லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத லெவல் கிராசிங் கேட்களை தினசரி ஆய்வு செய்வது உட்பட பல்வேறு உத்தரவுகளை ரயில்வே துறை பிறப்பித்துள்ளது.
ஐந்து ஆண்டுகள் நன்றாக பணியாற்றிய கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத லெவல் கிராசிங் கேட்களை தினசரி ஆய்வு செய்வது உட்பட பல்வேறு உத்தரவுகளை ரயில்வே துறை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில்வே கேட்களில், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் இரவு நேரத்தில் திடீர் சோதனை நடத்தி, சரியாக பணியாற்றாத கேட் கீப்பர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதேசமயம், லெவல் கிராசிங் கேட்டில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக, தெற்கு ரயில்வே தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் ரயில்வே கேட் அமைந்திருக்கும் லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு 11 முக்கிய நடைமுறைகளை பின்பற்றும்படி இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, அனைத்து கேட்களையும் இன்டர்லாக்கிங் முறைக்கு மாற்றுவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத ரயில்வே கேட் களை நாள்தோறும் ஆய்வு செய்வது, லெவல்கிராசிங்குகளை அகற்ற சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைக்க கட்டுமானத்தை துரிதப்படுத்துவது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதை செயல்படுத்துவது குறித் தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, பேசிய தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என் சிங், “தெற்கு ரயில்வேயில் 5 ஆண்டுகள் நன்றாக பணியாற்றிய கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த வேண்டும். 100 மீட்டர் தொலைவிலிருந்து லெவல் கிராசிங் கேட்களை பார்க்கும்போது மிகத் தெளிவாக இருக்கவேண்டும். மரக்கிளைகள், புதர்கள் ஏதாவது இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.