சிவகங்கை ரயில் நிலையத்தில், இன்று (நவ 29) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது, சிவகங்கை ரயில் நிலையத்தில் செய்து கொடுக்க வேண்டிய பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன குறிப்பாக, சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் வருகை தந்து கோரிக்கை மனு வழங்கினர்.
அதில், சிவகங்கை வழியாக இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் இரயில் இயக்கப்பட வேண்டும், செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் சிலம்பு இரயிலை தினசரி இயக்க வேண்டும், சென்னையிலிருந்து காரைக்குடி வரை செல்லும் பல்லவன் விரைவு ரெயிலை சிவகங்கை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும், மன்னார்குடியிலிருந்து காரைக்குடி வரை சென்று வந்த இரயிலை மீண்டும் இயக்கி சிவகங்கை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும், செங்கோட்டை தாம்பரம், இராமேஸ்வரம் வாரணாசி, இராமேஸ்வரம் அயோத்தியா, இராமேஸ்வரம் - அஜ்மீர், ஹூப்ளி -இராமேஸ்வரம், எர்ணாகுளம் வேளாங்கண்ணி ஆகிய இரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், பொதுமக்களின் நலன் கருதி சிவகங்கை ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும், நடைமேடை அமைக்க வேண்டும், தானியங்கி மேம்பாலம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
ஆய்வுக்கு பின்னர், பொது மேலாளர் ஆர். என். சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "வழக்கமாக நடத்தப்படும் ஆய்வுகள் தான் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து பரீசிலிக்கப்படும்" எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“