தெற்கு ரயில்வே-யின் கீழ் இயங்கும் ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது என்று தெற்கு ரயில்வே பட்டியல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்டிய டாப் 10 ரயில் நிலையங்களில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே வழித்தடங்களைக் கொண்ட நாடு இந்தியா. நாட்டில், 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக வருமானம் வரும் துறையாக ரயில்வே இருந்து வருவதால் ரயிவேக்கு தனி பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுப்போக்குவரத்து என்றால் அது ரயில்வேதான். பயணிகள் ரயில் மட்டுமல்லாமல் ரயில்கள் மூலம் சரக்கு போக்குவரத்தும் பெரிய அளவில் நடைபெறுகிறது. சரக்கு ரயில் போக்குவரத்து அதிக லாபம் ஈட்டும் துறையாக உள்ளது.
இந்நிலையில் ரயில்வே துறையில் 2024-ம் ஆண்டிற்கான ஆண்டு வருவாய் குறித்த தகவலை இந்திய ரயில்வே பொதுத் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மண்டலங்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024-ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேவிற்கு 12 ஆயிரத்து 20 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தெற்கு ரயில்வே பயணிகளிடமிருந்து ரயில் கட்டணமாக 7 ஆயிரத்து 151 கோடி ரூபாயும், சரக்கு ரயில் கட்டணம் மூலம் 3 ஆயிரத்து 674 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பட்டியலில் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தின் வருவாய் ஆயிரத்து 215 கோடியே 79 லட்ச ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது
இதேபோல, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 2வது இடத்திலும், கோவை ரயில் நிலையம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. திருவனந்தபுரம் 4வது இடத்திலும், தாம்பரம் 5வது இடத்திலும், எர்ணாகுளம் 6வது இடத்திலும் உள்ளன.
அதேபோல, மதுரை ரயில் நிலையம் 7வது இடத்தையும், கோழிக்கோடு 8வது இடத்தையும், திருச்சூர் 9வது இடத்தையும், திருச்சி ரயில் நிலையம் 10வது இடத்தையும் பிடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“