பொறியியல் பணிகளின் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கான பல்வேறு ரயில்களின் சேவைகள் முழுமையாகவும் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ரயில் பெட்டிகள், எஞ்சின்கள், தண்டாவளங்களை பராமரிப்பதற்காகவும், சிக்கல்களை களைவதற்காகவும், பாதுகாப்பு ஆய்வுகள், பொறியியல் பணிகளுக்காகவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்காகவும் ரயில் போக்குவரத்து சேவையில் சில காலம் மாற்றம் செய்வது, வேறு பாதைகளில் இயக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது முக்கிய ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் விடுத்து இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக பிரோஸ்பூா் - மண்டபம் இடையிலான 20973 என்ற எண் கொண்ட ஹம்சாபா் விரைவு ரயில் வரும் ஜனவரி 13 ஆம் தேதியும், மறுமார்க்கமாக வரும் ஜனவரி 16 ஆம் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மன்னார்குடி - பகத் கி கோத்தி இடையே இயக்கப்பட்டு வந்த அதி விரைவு ரயிலானது (எண்: 22674) இன்று ஜனவரி 8 ஆம் தேதியும், மறுமார்க்கமாக வரும் ஜனவரி 11 ஆம் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதி ரத்து: காரைக்குடி - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (எண்: 06888) நாளை ஜனவரி 9 ஆம் தேதி, ஜனவரி 23 ஆம் தேதி, ஜனவரி 30 ஆகிய தேதிகளில் குமாரமங்கலம் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி - பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவற்ற சிறப்பு ரயிலானது (எண்: 16843) வரும் 19 ஆம் தேதி 120 நிமடங்களும், வரும் ஜனவரி 23 ஆம் தேதி, ஜனவரி 26 ஆம் தேதி, ஜனவரி 30 ஆகிய தேதிகளில் 60 நிமிடங்களும் தாமதமாகப் புறப்படும். ஈரோடு - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் முன் பதிவற்ற சிறப்பு ரயிலானது (06810) நாளை ஜனவரி 9 ஆம் தேதி, ஜனவரி 23 ஆம் தேதி, ஜனவரி 30 ஆகிய தேதிகளில் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நின்று செல்லும்." என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“