க.சண்முகவடிவேல்
தென்னக ரயில்வேயில் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாளம் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி வருகிற 31-ம் தேதி வரை நடைபெறும். இதையடுத்து குட்ஷெட் பாலப் பகுதியில் உள்ள ரயில்வே வழித்தடத்தில் ரயில்வே ஊழியர்கள் பழைய தண்டவாள பாதையை சீரமைத்து வருகின்றனர்.
இந்த ரயில்வே வழித்தடத்தை சீரமைக்க நவீன எந்திரத்தை கொண்டு ரயில்வே ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் முன்பதிவில்லாத விரைவு ரயில் வருகிற 31-ம் தேதி வரை தஞ்சை - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் அந்த ரயில் தஞ்சையில் இருந்து காரைக்கால் செல்லாது. இதே போல், திருச்சி வழியாக செல்லும் மயிலாடுதுறை - விழுப்புரம் செல்லும் முன்பதிவு இல்லாத விரைவு ரயில், மயிலாடுதுறை - கடலூர் துறைமுகம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும் முன்பதிவில்லாத விரைவு ரயில், திருச்சி கோட்டை - திருச்சி ஜங்ஷன் இடையே வருகிற 25-ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.