சென்னையில் இருந்து பெங்களூரு வரை 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது.
தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் வழித்தளங்களில் உட்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் முக்கியமாக, 'வந்தே பாரத்' ரயில் இயங்கும் வழித்தளத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்குவது தொடர்பான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே சமர்ப்பித்துள்ளது.
இதே போல், சென்னை கூடூர், சென்னை ரேணிகுண்டா வழித்தளத்திலும் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்குவது தொடர்பான திட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவனந்தபுரம்- மங்களூரு வழித்தளத்திலும் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் பயணிகளின் பயணநேரத்தில் 30 நிமிடத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து ரேணிகுண்டா வரை 134.78 கிலோமீட்டர் தூரமுள்ள வழித்தளத்தில் ரயில்களின் வேகம் ஏற்கனவே மணிக்கு 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ. என அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் – ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை – போத்தனூர் மற்றும் சென்னை – திண்டுக்கல் ஆகிய பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு திட்ட அறிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil