நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்ற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து தமிழகத்தில் நெல்லையில் கொட்டப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிடோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் அல்லது கழிவு மேலாண்மை நிறுவனத்திடம் தர வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், கேரள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதனை அகற்றுவதற்கான செலவை கேரள அரசு ஏற்க வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“