கட்டுரை: த. வளவன்
கொல்லத்திலிருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் அனந்தபுரி ரயில் 2002-ம் ஆண்டு பட்ஜெட்டில் வாரத்திற்கு ஆறு நாள் ரயிலாக அறிவிக்கப்பட்டு பின்னர் 2005-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தினசரி ரயிலாக மாறி இன்று வரை தினசரி ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 2002-ம் ஆண்டு நாகர்கோவில் - சென்னை வழித்தடத்தில் வாரத்துக்கு நான்கு நாள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. இந்த சிறப்பு ரயில் குமரி மாவட்ட பயணிகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டு திருவனந்தபுரம் - சென்னை ரயில் என அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கேரளாவை சேர்ந்த ராஜகோபால் ரயில்வே இணை அமைச்சராக இருந்தமையால் திருவனந்தபுரம் - சென்னை என்ற வழித்தடத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டு இயக்கப்பட்டது.
இந்த ரயில் சுமார் 14 லட்சம் மக்கள் தொகை கொண்ட கல்குளம், திருவட்டார் மற்றும் விளவன்கோடு தாலுகாவை சேர்ந்த பயணிகள் அதாவது பாறசாலை, குழித்துறை மற்றும் இரணியல் ரயில் நிலையத்தை சேர்ந்த பயணிகளுக்கு தங்கள் மாநிலத்தின் தலைநகர் சென்னைக்கு செல்லும்படியாக இயக்கப்பட்டு வரும் ரயிலாக மாறியது. இந்த ரயில் மட்டும் தான் தமிழகத்தின் மாநில எல்லைக்குள் அதிக பரப்பு, அதாவது 765 கி.மீ தூரம் பயணிக்கும் வகையிலும் அதிக பயணிகளுக்கு பயன்படும் வகையிலும் இயக்கப் பட்டு வருகிறது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே குமரி மாவட்டத்தில் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களையும் மாநில தலைநகர் சென்னையுடன் இணைக்கிறது. தென்மாவட்ட பயணிகள் முதலில் கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை போன்ற ரயில்களில் முன்பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொண்டு, இருக்கைகள் இல்லை என்றால் மட்டுமே வேறு வழியின்றி கடைசி தேர்வாக அனந்தபுரி ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து வந்தனர். தற்போது மற்ற ரயில்களை காட்டிலும் இந்த ரயிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து இயக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வெளியான கால அட்டவணையின்படி இந்த ரயில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகள், திருவனந்தபுரம் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு முதலில் செல்லும் தினசரி ரயிலாக மாறியுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களை சார்ந்த பயணிகளின் முன்பதிவில் முதல் தேர்வாக அனந்தபுரி ரயில் உள்ளது. இதனால் இந்த ரயிலில் பயணம் செய்ய அதிக அளவில் பயணிகள் முட்டி மோதி முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போது இந்த ரயிலுக்கு கொல்லம் முதல் நாகர்கோவில் டவுன் வரை உள்ள ரயில் நிலையங்களில் பொது முன்பதிவு ஒதுக்கீடாகவும் ஆரல்வாய்மொழி முதல் திருநெல்வேலி வரை உள்ள ரயில் நிலையங்கள் தனி ஒதுக்கீடாகவும் இருக்கின்றது.