மேற்கு திசைவேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாள் முன்பாகவே, அதாவது 27-ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்றும், நாளையும் அதிக பட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி களில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, 39 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம் என்றும் வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை உட்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து சதம் அடித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், நேற்று (மே 12) 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
அதேபோல, கரூர் பரமத்தி, மதுரை மாநகரம், ஈரோடு ஆகிய இடங்களில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், பாளையங்கோட்டை, திருத்தணி, சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதாகத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வேலூர், நாகப்பட்டினம், சேலம் ஆகிய இடங்களில் 101 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவானதாகக் குறிப்பிட்டுள்ளது.