கேரளாவில் இந்த ஆண்டு மே 25 ஆம் தேதி முன்னதாகவே தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழையாகப் பொழிந்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தது போலவே, கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை இடைவிடாது பெய்து வருகிறது.
இந்தத் தொடர் கனமழையால் கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக கோவை குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் தொடர் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
குற்றாலத்தில் குளிக்கத் தடை தொடரும்
தொடர் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்ட தடை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் அருவிகளில் அதிகரித்துள்ள நீர்வரத்து காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தை மக்கள் கவனமுடன் எதிர்கொள்ள வேண்டும்.