Southwest monsoon | Rain-in-tamilnadu: நாட்டின் வளர்ச்சியில் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய இரண்டும் முக்கியபங்கு வகிக்கின்றன. நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் இந்தியாவில் இதுவரை 780.3 மிமீ மழை பெய்துள்ளது. சராசரியாக 832.4 மிமீ மழை பெய்துள்ளது. நீண்ட கால சராசரியில் (LPA) 94 சதவீதம் முதல் 106 சதவீதம் வரை மழைப்பொழிவு இயல்பானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக, இந்த பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு சராசரியாக 870 மிமீ மழையைப் பெறும்.
இந்நிலையில், இந்தியாவில் வருகிற செப்டம்பர் 25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 17ம் தேதி விலகத் தொடங்கி அக்டோபர் 15-க்குள் முழுமையாக விலகும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு 8 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்குகிறது. மேற்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து செப்டம்பர் 25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும் என்றும், படிப்படியாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தென்மேற்கு பருவமழை விலகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வாரத்திற்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“