நாகர்கோவிலை சேர்ந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக என் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளால் எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கில் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் வழக்குகள் திரும்ப பெறப்படவில்லை. இந்நிலையில் துருக்கியில் கடந்த 2022ல் நடைபெற்ற சர்வதேச இதழியல் மாநாட்டில் பங்கேற்க பாஸ்போர்ட் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நான் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கியது. அப்போது எனக்கு எதிரான லுக் அவுட் (தேடப்படும் குற்றவாளி) நோட்டீஸை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. நான் மீண்டும் சிங்கப்பூர் செல்ல விண்ணப்பித்தேன். அப்போது எனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் எனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை திரும்ப பெறுவது குறித்து நெல்லை காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் 2 வாரத்தில் முடிவெடுக்க தவறினால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil