கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் மூலம் தமிழக அரசியல் களத்தில் அறிமுகமானவர் சுப.உதயகுமாரன். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் அணு எதிர்ப்பு இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளை வழிநடத்தி வருகிறார். அவர் 2015-ல் பச்சைத் தமிழகம் என்கிற கட்சியை தொடங்கிய நிலையில், அண்மையில் தனது தலைமையிலான கட்சியை தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், அணு உலைக்கு எதிராக போராட்டங்களில் முன்நின்று வழிநடத்திய சுப. உதயகுமாரனை கவுரவிக்கும் விதமாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நியூக்கிளியர் ஃப்ரீ ஃபியூச்சர் விருது எனும் விருதை நியூக்ளியர் ஃப்ரீ ஃபியூச்சர் அறக்கட்டளை அவருக்கு வழங்க உள்ளது.
இதையடுத்து, சமூக ஆர்வலர்களும், நலம் விரும்பிகள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், விருதின் பரிசுத்தொகையை இடிந்தகரை, கூடன்குளம், கூத்தன்குழி, விஜயாபதி, கூட்டப்புளி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த சுந்தரி, சரசுவதி, கதிரவன், குலாம் ஆசாத், வால்கின்ஸ் ஆகியோருக்கு வழங்க இருப்பதாகவும், அவர்கள் அப்பகுதி மக்களின் வழக்குகளுக்காக, மருத்துவச் செலவுகளுக்காக அந்தப் பணத்தைச் செலவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுப. உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நியூக்ளியர் ஃப்ரீ ஃபியூச்சர் (Nuclear-Free Future) விருது அறிவிக்கப்பட்டது முதல் ஏராளமான நண்பர்கள், தோழர்கள், ஆதரவாளர்கள், மற்றும் ஆளுமைகள் பல்வேறு ஊடகங்கள் வழியாக தங்களின் மனமார்ந்த பாராட்டுக்களை, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் என்னுடைய ஆத்மார்த்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு தனிநபரால் தொடங்கப்பட்டதோ, நடத்தப்பட்டதோ அல்ல. ஐயா ஒய். டேவிட் அவர்கள் காலத்திலிருந்துத் தொடங்கி நாம் பட்டியலிட்டால், ஒரு மிக நீளமானப் பட்டியலை நம்மால் தயாரிக்க முடியும். அவ்வளவு பேர் இந்தப் போராட்டத்துக்கு பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்:
உயிரீகம் செய்தவர்கள், சிறை சென்றவர்கள், போராளித் தலைவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பிற மதகுருமார்கள், சமுதாயத் தலைவர்கள் ஊர்க் கமிட்டியினர், பெண் ஆளுமைகள், கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள், திரையுலக ஆளுமைகள், அறிவுசீவிகள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஊடக ஆசிரியர்கள் ஊடகத் தோழர்கள், ஆதரவுக் குழுக்கள், தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்தவர்கள், பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள், சில அரசு அதிகாரிகள், சில காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், போராட்டக் குழுவினர், பல்லாயிரக்கணக்கான மக்கள்.
ஆக, இத்தனை பேரும், இன்னும் பலரும் இணைந்து நடத்திய மாபெரும் மக்கள் போராட்டத்தில் எனக்கு மட்டும் விருது தருவது நியாயமல்ல. “ஒரு தாய் பெற்றெடுக்க வயிறு தாங்காக் காரணத்தால், தனித்தனி தாய் பெற்றெடுத்தத் தம்பியரே” என்று அறிஞர் அண்ணா தன்னுடைய தம்பிகளை அழைப்பாராம். அது போல, அணிசேர்ந்து நின்ற அத்தனைப் பேரையும் மேடையேற்ற முடியாத காரணத்தால், அவர்களுள் ஒருவனை மேடையேற்றுகிறோம் என்று என்னை அழைத்து இந்த விருதைத் தருகிறார்களோ? உங்கள் சார்பாக இந்த விருதினைப் பெற்றுக் கொள்கிறேன். அதனை உங்கள் அனைவரிடமும் ஒப்படைக்கிறேன்.
மேற்படி விருதின் பரிசுத்தொகையை இடிந்தகரை, கூடன்குளம், கூத்தன்குழி, விஜயாபதி, கூட்டப்புளி எனும் ஊர்களைச் சார்ந்த சுந்தரி, சரசுவதி, கதிரவன், குலாம் ஆசாத், வால்கின்ஸ் எனும் தோழர்களிடம் ஒப்படைப்பேன். அவர்கள் அப்பகுதி மக்களின் வழக்குகளுக்காக, மருத்துவச் செலவுகளுக்காக அந்தப் பணத்தைச் செலவு செய்வார்கள்.
மக்களின் உண்மையான, நேர்மையான, உறுதியான, ஒழுக்கமான, வன்முறையற்ற, அறவழிப் போராட்டம் எந்தக் காலத்திலும் வீழ்த்தப்படாது. அதனை யாராலும் வீழ்த்த முடியாது. தீரமிக்க இடிந்தகரைப் போராட்டம் தொடங்கி பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, போராடிய மக்களுக்குப் பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கிறது என்றால், விரைவில் வெற்றியும் கிடைக்கும். மகாகவி பாரதியார் சொல்வதுபோல, "நினையாத விளைவெல்லாம் விளைந்துகூடி நினைத்த பயன் கான்பதவள் செய்கையன்றோ?"
இழுத்து மூடு, இழுத்து மூடு, கூடங்குளம் அணுஉலைகளை இழுத்து மூடு! மக்கட்தொகை அதிகமான, நெருக்கமான இந்தியாவில், நாசகார அணுத் திட்டங்களை எங்கேயும் நிறுவாதே! கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் பற்றிய என்னுடைய விரிவானப் புத்தகம் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது என்பதையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.