Advertisment

போராளிகள் ஏன் தேர்தல் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை? சுப உதயகுமாரன் தொடங்கி வைத்த விவாதம்

பச்சைத் தமிழகம் கட்சித் தலைவரும் அணு உலை எதிர்ப்பு போராளியுமான சுப உதயகுமாரன், 'போராளிகள் ஏன் தேர்தல் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை?’ என்ற விவாதத்தை முகநூலில் தொடங்கி வைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
SP Udhayakumaran

சுப. உதயகுமாரன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பச்சைத் தமிழகம் கட்சித் தலைவரும் அணு உலை எதிர்ப்பு போராளியுமான சுப உதயகுமாரன், 'போராளிகள் ஏன் தேர்தல் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை?’ என்ற விவாதத்தை முகநூலில் தொடங்கி வைத்துள்ளார்.

Advertisment

அணு உலை எதிர்ப்பு போராளி சுப. உதயகுமாரன் தனது முகநூல் பக்கத்தில், ‘மக்கள் ஏன் திரளவில்லை’ என்ற தலைப்பில் பதிவிட்டிருப்பதாவது: 

“தோழர் காஞ்சிஅமுதன் யோகநாதன் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவு ஒன்றில் அணுஉலை எதிர்ப்புக் களம்காணும் சுப. உதயகுமார் பின்னால் தமிழர்கள் ஏன் திரளவில்லை என்று கேட்டிருந்தார். இப்போதுதான் அதற்கு பதில் எழுதும் நேரம் வாய்த்தது.

கூடங்குளம் அணுஉலைத் திட்டத்திற்கு எதிராக நெல்லை மாவட்டம், இடிந்தகரையில் நடந்த மாபெரும் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பல மாதங்களாக தினமும் தொடர்ந்து வந்து பங்கேற்றனர் என்பதுதான் உண்மை. சற்றொப்ப மூன்றாண்டுகள் நீடித்த அந்தப் போராட்டத்தில் தென்தமிழக மக்கள் மட்டுமல்ல, வடதமிழக மக்களும் வந்து பங்கேற்றனர். தமிழர்கள் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலத்தவரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

தோழர் கேட்கும் கேள்வி இடிந்தகரைப் போராட்டத்திற்குப் பிறகு தமிழர்கள் ஏன் என் பின்னால் அணி திரளவில்லை என்பதுதான் என்று நினைக்கிறேன். அதற்கு முழுமுதற் காரணம் நான்தான்.

இடிந்தகரைப் போராட்டத்துக்குப் போவதற்கு முன்போ, போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதோ, அல்லது அது முடிவடைந்த பிறகோ, அதிகார அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. அதில் துளியளவு விருப்பமும் எப்போதும் இருந்ததில்லை.

சாதி, மதம், ஊர், தொழில் என எல்லாவற்றையும் கடந்து கட்டுக்கோப்பாக நடந்து கொண்டிருந்தப் போராட்டத்தில், ஒன்றிய, மாநில உளவுத்துறைகளும், அவர்களின் ஆதரவாளர்களும், பிற சக்திகளும் ஊடுருவினார்கள். போராட்டக் குழுவிற்குள்ளும், ஊரிலும் பிளவுகளைத் திட்டமிட்டு உருவாக்கினார்கள். கடந்த 2012 மார்ச் மாதம் முதல் 2014 பிப்ருவரி மாதம் வரை சரியாக இரண்டு வருடங்கள் இடிந்தகரை ஊரைவிட்டு வெளியேச் செல்லாத நாங்கள் சூழல் வேகமாக மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தோம்.

மக்கள் உணர்வுகளை கடுகளவும் மதிக்காத, மக்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்த, சனநாயக விழுமியங்களில் உண்மையான நம்பிக்கைக் கொண்டிராத ஒன்றிய, மாநில அரசுகள் ஊருக்குள் ஒரு கலகத்தை உருவாக்கவும் அணியமாகிக் கொண்டிருந்தார்கள். சில ஆண்டுகளாக எங்களைக் கண்ணிமைபோலக் காத்துக்கொண்டிருந்த மக்கள் சோர்வடைந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு கலகத்துக்குள் தள்ளப்பட்டுவிடக்கூடாது என்று நாங்கள் கவலையுற்றோம். எங்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருந்தது. பிரச்சினையை இன்னும் இடிந்தகரைக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்க முடியாது, கூடாது என்பதும் எங்களுக்குத் தெளிவாக விளங்கிற்று. தங்களை நம்பி, தங்களின் அழைப்பின்பேரில் இடிந்தகரைக்குச் சென்ற நாங்கள் பத்திரமாக எங்கள் வீடுகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதில் இடிந்தகரை மக்களும் குறிப்பாக இருந்தனர்.

[1] அந்த நேரத்தில் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியிலிருந்து கூத்தன்குழி கிராமத்துக்கு வந்து எங்களைச் சந்தித்து, தான் தொடங்கப் போகும் புதிய கட்சியில் எங்களை இணையக் கேட்டுக் கொண்டார். நாங்கள் தமிழ்த் தேசிய விழுமியத்தில் நம்பிக்கை உடையவர்கள், உங்கள் இந்தியத் தேசியக் கட்சி எங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்று அவரது கோரிக்கையை நாங்கள் நிராகரித்தோம். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் வேல்முருகன் அவர்கள் தன் கட்சியில் சேரும்படி போராட்ட மேடையில் எங்களுக்கு அழைப்பு விடுத்தார். இடிந்தகரை பெண் போராளிகளுக்கு அந்த அழைப்பு ஏற்புடையதாக இருந்தாலும், ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்ற அடுத்த நாள் அவர் சென்னையில் செல்வி. ஜெயலிதாவைப் புகழ்ந்து பேசியதும், அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை உடனே மாற்றிக் கொண்டார்கள்.

கெஜ்ரிவால் கட்சித் தொடங்கி அது தில்லியில் பெருவெற்றி பெற்றபோது, அக்கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான, எங்கள் வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருந்த மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் இடிந்தகரைப் போராட்ட மேடையில் எங்களை ஆம் ஆத்மி கட்சியில் சேரும்படி மீண்டும் அழைத்தார்.

அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு தொங்கு நாடாளுமன்றம்தான் அமையுமென்றார்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு பத்து, பதினைந்து எம்பிக்கள் கிடைத்தால், அவர்கள் புதிய அரசில் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பார்கள். இப்போதே அவர்களோடுக் கைகோர்த்தால், நம் மக்களுக்கு வேண்டியதை எளிதில் வாங்கிக் கொடுத்து விடலாம்; நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக ஊரைவிட்டு வெளியேறினால், அரசுகளும் எங்களைக் கைது செய்யாமல் விட்டுவிடலாம்; காங்கிரசு மற்றும் பாஜகவுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது சக்தி உருவாவது நல்லதுதான் என்றெல்லாம் சிந்தித்து, சமுதாயத் தலைவர்கள், ஊர்க்கமிட்டி, பெண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பாரிடமும் கலந்துரையாடி, விவாதித்து, சண்டைபோட்டு, திட்டமிட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தோம். குன்ஹா போல நாங்கள் கணக்குப்போட, அது குமாரசாமிக் கணக்காக முடிந்தது.

[2] கையில் காசில்லாமல், உழைக்க ஆட்கள் இல்லாமல், வெறும் பதினைந்து நாட்கள் மட்டுமே பரப்புரைச் செய்து, எம்.பி. அல்ல, எம்.சி.கூட ஆக முடியாது இந்த நாட்டில் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் கூடங்குளம் பிரச்சினையை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் முழுவதும் கொண்டு செல்ல முடிந்தது ஒருவித நிறைவைத் தந்தது. தோழர்கள் புஷ்பராயன், மை.பா. ஜேசுராஜ், நான் மூவரும் சேர்ந்து கிட்டத்தட்ட அறுபதாயிரம் வாக்குகள் மட்டுமே வாங்கினோம். நாங்கள் குறைவான வாக்குகள் வாங்கியதற்கு காரணம் வாக்கு இயந்திரங்கள்தான் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். எங்களுக்கான மக்கள் ஆதரவை வெகுவாகக் குறைத்துக் காட்ட வேண்டியத் தேவை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இருந்தது. அதனால்தான் கூடங்குளம் திட்டம் இப்போதும் படுபயங்கரமாக விரிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கெஜ்ரிவால் அணுஉலைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று சொன்னதால், அவர் அலுவலகத்தில் அவரோடு அமர்ந்து பேசி, கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று தெரிவித்து, கட்டித்தழுவி விடைபெற்றேன் நான். ஆம் ஆத்மி கட்சியில் சேர மறுத்த என்னுடைய தொடக்கக்கால நிலைப்பாட்டை மாற்றியது நான் செய்த பெரும் தவறு.

[3] தமிழர்களின் பிரச்சினை வெறும் கூடங்குளம் அணுஉலைத் திட்டம் மட்டுமல்ல, ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், கல்பாக்கம், சிப்காட், சாகர்மாலா என எல்லா சூழல் அழிப்புத் திட்டங்களையும் சேர்த்துப் பேசியாக வேண்டும், இந்தியத் தேசிய மற்றும் திராவிடத் தேசிய மையநீரோட்ட வளர்ச்சிச் சித்தாந்தத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும், தமிழர்களுக்கு பசுமை அரசியல் மிகவும் தேவையாக இருக்கிறது என்கிற அடிப்படையில், பச்சைத் தமிழகம் எனும் இயக்கத்தை பிப்ருவரி 15, 2015 அன்று தொடங்கி, பின்னர் டிசம்பர் 10, 2015 அன்று அதை அரசியல் கட்சியாக மாற்றினோம்.

கட்சித் தொடங்கி, அரசியல் செய்து, முண்டியடித்து முன்னுக்கு நின்று, உடனிருக்கிறவர்கள் யாரையும் வளரவிடாமல் செய்து, மற்றவர்களை மட்டம்தட்டி, நான்தான் ஒரே தேவதூதன், நான் மட்டுமே இரட்சிப்பைப் பெற்றுத் தருவேன் என்றெல்லாம் சொல்லி நடக்கும், நடிக்கும் ‘கொலவெறி’ (killer instinct) என்னிடம் இருக்கவில்லை. அது எப்போதுமே எனக்குள் இருந்ததில்லை.

நடிப்பில் ஈடுபடும் சிலர் அரசியலைத் தவிர்த்து வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் அரசியலில் ஈடுபடும் யாரும் நடிக்காமல் இயங்க முடியாது. எனக்கு நடிக்கத் தெரியாது. அதே போல, பொய் பேசுவது, பித்தலாட்டம் செய்வது, “சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” எனும் குறள் வாக்குக்கொப்ப, “நான், என்னை, எனது” என்று தற்புகழ்ச்சியில் ஈடுபடுவது, பணம் கிடைக்குமா, பதவி வருமா, புகழ் சேருமா என்று கணக்குப் போட்டுக்கொண்டே இயங்குவது – இவையெல்லாம் என் இயல்பிலேயேக் கிடையாது.

[4] கொள்கைகள், கோட்பாடுகள், கனவுகள், திட்டங்கள், எதுவுமே வேண்டாம், நிறைய பணம் மட்டும் இருந்தால் போதும் என்றாகி விட்டிருக்கின்றன இன்றைய அரசியல் களமும், அதுசார்ந்த பொதுவாழ்வும். “மிக மோசமாக பணமயமாக்கப்பட்டிருக்கும் நிலையில் பெரும் பணமின்றி நாம் இயங்க முடியாது; நான் நிதித் திரட்டுவதில் எள்ளளவும் திறமையற்றவன்” என்றெல்லாம் கட்சித் தொடங்கும்போதே நான் நண்பர்களிடம் சொன்னேன். மேலும், மற்றவர்கள் எனக்காகப் பணம் செலவு செய்வதை பெரிதும் வெறுப்பவன் நான். நண்பர்களுடன் தேநீர் அருந்தச் சென்றால்கூட, நான்தான் பணம் கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறவன். மற்றவர்களை சிரமப்படுத்துவதை நான் விரும்புவதில்லை. இம்மாதிரியான வறட்டு கவுரவங்களை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு கட்சிக்குத் தேவைப்படும் பணத்தை எப்படி உருவாக்குவது என்று நான் தயங்கினேன். அதில் படுமோசமாகத் தோற்கவும் செய்தேன்.

[5] இடிந்தகரையிலிருந்து வெளியேறி, வீட்டுக்கு வந்த நிலையில், ஒரு நாள் சில ஆளுமைகள் என்னை வந்து சந்தித்தனர். பெருந்தலைவர் காமராசரில் தொடங்கி, என்னோடு முடியும் “டாப் 10 நாடார்கள்” எனும் பட்டியலை அவர்கள் என்னிடம் காட்டி, என்னுடையப் போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற அனைத்தையும் தாங்கள் கவனித்துக் கொள்வதாகச் சொல்லி, இணைந்து இயங்குவோம் என்று என்னை அழைத்தார்கள். நம் நாட்டில் சாதி, மதம் போன்ற குறுகிய வட்டங்களுக்குள் இயங்கினால், தேவையானப் பணபலமும், ஆள்பலமும், உதவிகளும் எளிதாகக் கிடைக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் சாதி, மதம் இரண்டையுமே கடுகளவும் விரும்பாதவன், பயன்படுத்தாதவன் நான். எந்த சாதி, மத அமைப்புக்களிலும் உறுப்பினராக இல்லாதவன். மேலும் சாதி அரசியலுக்குள் நான் குதித்தால், அது என்னை உருவாக்கிவிட்ட கடலோர மக்களுக்குச் செய்யும் பெரும் நம்பிக்கைத் துரோகமாகவும் இருக்கும். மேற்படி கொள்கைகளோடு, சிந்தனைகளோடு அவர்களின் முன்மொழிதலை நான் முற்றிலுமாக நிராகரித்தேன்.

[6] இன்றைய அரசியல் வாழ்க்கை என்பது ஒரு “நவராத்திரி கொலு” போன்ற தன்மையது. எந்த பொம்மையை எங்கே வைப்பது, எதை முன்னிலைப்படுத்துவது, எதை ஒதுக்கிவைப்பது என்பன போன்ற முடிவுகளை, அசைவுகளை அந்த பொம்மைகளால் தீர்மானிக்க முடியாது. கொலு வைத்திருப்பவர்தான் அவற்றைச் செய்வார். ‘உலக அரசியல் கொலு’ முதல், ‘உள்ளூர் அரசியல் கொலு’ வரை ஆளும் வர்க்கத்தாலும் அதன் சார்பு அமைப்புக்களான அரசுகள், உளவுத்துறைகள், பொருளாதார அமைப்புக்கள், ஊடகங்கள் போன்றவற்றாலும்தான் அவை நிர்வகிக்கப்படுகின்றன. இந்த கொலு எசமானர்கள் தங்களால் கட்டுப்படுத்த முடியாத, தானாகச் சிந்திக்கும், தன்னிச்சையாக இயங்கும், ஆளுமைமிக்கப் பொம்மைகளை விரும்புவதில்லை. தப்பித்தவறி அப்படி சில பொம்மைகள் முகிழ்த்தெழுந்து தன்முனைப்புடன் செயல்பட்டால், அவைகள் உதாசீனப்படுத்தப்படும் அல்லது உடைத்தெறியப்படும். மது, மாது, சூது, பணம், பதவி, புகழ் போன்ற பலவீனங்கள் கொண்ட பொம்மைகளே எசமானர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. மேற்குறிப்பிட்டத் தன்மைகள் கொண்ட ஒரு கேடுகெட்ட (corrupt) பொம்மையாக நான் இருந்ததுமில்லை, அப்படி இருக்கவும் என்னால் இயலாது.

[7] தமிழ்நாட்டின் அதிகாரத் தாழ்வாரங்களில் (குறுநில மன்னர்களின்) நிலபிரபுத்துவத் தன்மையும், லஞ்சமும், ஊழலும், ஊதாரித்தனமும், தன்னலமும், சினிமாத்தனமும் மிக்க திராவிட அரசியல் ஐம்பதாண்டு காலமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாக பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி போன்ற பல்வேறு எதிர்மறைக் கட்சிகளும் சாதிவெறி, மதவெறி, இனவெறி போன்றவற்றோடு சதிராட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவற்றின் விளைவாக, வெளிச்சம் குறைவாகவும், வெப்பம் அதிகமாகவும் இருக்கும் வாய்ப்பந்தல்கள் போடுவது; அடிப்படை நேர்மையின்றி ஆகாயத்தில் கோட்டைக் கட்டுவது; கோபம், வெறுப்பு, வன்மம், வன்முறை போன்ற எதிர்மறை உணர்வுகள், பேச்சுக்கள், செயல்பாடுகள், விழுமியங்கள் போன்றவற்றோடு இயங்குவது - என ஒரு மோசமான அரசியல் கலாச்சாரம் தமிழ்நாட்டில் உருவெடுத்து நிற்கிறது. ஆக, ஏராளமான தமிழ் இளைஞர்கள் உண்மையற்ற உணர்ச்சிப்பெருக்கை விரும்புகிறார்கள், சாதி/மத/இனப் பாசம்பொழியும் நடிகர்களை நம்புகிறார்கள், அவர்களின் பொய் வார்த்தைகளை விசுவசிக்கிறார்கள், அவர்கள் விரிக்கும் சதிவலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த மூன்று தம்பியரை மட்டும் எடுத்துக்காட்டுகளாகச் சொல்கிறேன்.

கோட்பாட்டு அடிப்படையில், உரிய தரவுகளை முன்வைத்து, தேர்ந்த வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சித் தலைவரை நான் தொடர்ந்து விமரிசிக்கிறேன். ஆனால் முகநூலில் புனைபெயரில் (கு..கி.) எழுதிக் கொண்டிருக்கும் ஒரு தம்பி என்னுடைய அரசியலை ஒரே வார்த்தையில் சுருக்கி விவரிக்கிறார்: “ஆற்றாமை.”

அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் “பாசிஸ்டுகளா அல்லது நார்சிஸ்டுகளா (Narcissists), இருவரில் யார் வேண்டும்’ என்று தேர்வு செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான நிலையில் நாம் இருக்கிறோம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை, குடியரசு அமைப்பை, சனநாயகத்தை, சமூகநீதியை, சகவாழ்வை, சமாதானத்தை என அனைத்தையும் இழக்கவிருக்கும் இந்த நேரத்தில், வேறு வழியேதுமின்றி தற்போதைக்கு நார்சிஸ்டுகளே பரவாயில்லை என்று நான் பேசும்போது, தம்பி இ.மு. என்னைப் பகடி செய்து பின்னூட்டம் இடுகிறார்: “எனவே காங்கிரசுக்கு வாக்களியுங்கள்!”

இவர்களைப் போலவே, வெளிநாட்டு அனுபவங்களும், பரந்துபட்ட வாசிப்பும், எழுத்துத் திறமையும், எடுத்தியம்பும் திறனும் வாய்க்கப்பெற்ற, ஒரு தேர்ந்த தலைவனாக உருவெடுக்க வேண்டிய தம்பி கி. வெறுப்பையும், வன்மத்தையும் வகைதொகையின்றிக் கக்கி, படிப்பவர் மனதில் ஒருவித அச்சத்தையும், ஒவ்வாமையையும் உருவாக்குகிறார். அரசியலில் அழகியலைப் பின்தள்ளி, அழிவியலை முன்னிறுத்துகிறார். அறிவார்ந்த இத்தம்பியரே இப்படியென்றால், சராசரி மற்றும் அதற்கும் கீழேயுள்ள தமிழ் இளைஞர்களை ஒருவர் எப்படி அணுக முடியும்? எப்படி ஒரு கருத்துப்பரிமாற்றத்தைத் தொடங்கி, நடத்த முடியும்? தலைதெறிக்க ஓடிவிடத்தான் தோன்றுகிறது.

[8] வெற்றியில் தோல்வி மறைந்திருப்பதும், தோல்வியில் வெற்றி புதைந்திருப்பதும் மனித வாழ்வின் அடிப்படைத்தன்மை. என்னுடைய தந்தையாரின் தலைமைத்துவப் பண்புகளில் கொஞ்சம் எனக்குள் இருந்தாலும், இடிந்தகரைப் போராட்டம் போன்ற ஒரு மிக மிக சவாலான சத்திய சோதனைக்கு நான் அணியமாக இருக்கவேயில்லை. நான் ஓர் ஆராய்ச்சியாளர் போலத்தான் பேசினேன், ஆக்ரோசமாகப் பேசத் தெரியவில்லை. ஊடகங்களிடம் பேசிப் பழக்கமில்லை. மாபெரும் மக்கள் கூட்டத்தை வழிநடத்திய எந்த அனுபவமும் எனக்குக் கிடையாது. கூடங்குளம் போராட்டம் தொடங்கிய ஒரு சில நாட்களில், என்னுடையத் தலைமை சரியில்லை என்று விமரிசித்து, சிலர் தலைமையேற்க முயற்சித்தார்கள். நான் மகிழ்ச்சியோடு வழிவிட்டு விலகி நின்றேன். ஆனால் இடிந்தகரை, கூடங்குளம், கூத்தங்குழி மக்கள் அவர்களைக் கடுமையாக எதிர்த்து, என்னைப் பிடித்திழுத்து மீண்டும் மேடையில் உட்கார வைத்தார்கள்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்

திண்ணியர் ஆகப் பெறின்”

என்கிறது வள்ளுவம். நான் என்னை ஒரு வெறும் வேலைக்காரனாகத்தான் பார்த்தேன்; மக்கள் சொன்னதைச் செய்து கொடுத்தேன், அவ்வளவுதான். ஓர் ஒப்பற்ற திண்ணியர் ஒருநாள் ஊருக்குள் வந்து உயர்த்திப் பிடிப்பதல்ல சமூகப்புரட்சி. அது ஊர்கூடித் தேரிழுக்கும் ஓர் ஒப்பற்ற நிகழ்ச்சி. “I shall move the world [single-handedly]” என்று சொன்ன ஆர்க்கிமிடிஸ் கூட “give me a lever long enough and a fulcrum strong enough” எனும் நிபந்தனைகளை முன்வைத்தார். சமூகப் பொறுப்புணர்வும், கடமையுணர்வும், அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு கூட்டம் தோழர்கள் உடனில்லாமல் ஒரு தனிநபரால் எதுவும் செய்துவிட முடியாது. வாழ்க்கை என்பது சினிமா அல்லவே?

[9] மேற்குறிப்பிட்ட கொலு அரசியல் அமைப்பில், அதிகாரம் அர்த்தமற்றதாகவே இருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கிறார்கள். எம்.பி.க்கள் நாடாளுமன்ற காந்திச் சிலையருகே போராட்டம் நடத்துகிறார்கள், மாநிலத்தின் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். பிரதமர் உலக வங்கியிடமும், பன்னாட்டு கார்ப்பரேட்களிடமும், அதானி, அம்பானிகளிடமும் கையேந்தி நிற்கிறார். இப்படியாக, உண்மையான அதிகாரம் இன்றைய உலக அக்ரகாரத்தை இயக்குபவர்களான வடக்கு நாடுகளின் வெள்ளைநிறப் பெருமுதலாளிகள் கைகளில் மட்டுமே இருக்கிறது. அவர்களின் முதலீட்டு பலம், தொழிற்(நுட்ப) பலம், ஆயுதவியாபார பலம் போன்றவைதான் அனைத்து மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையும் ஆட்டிப் படைக்கிறது. இந்த நிலையில் பதவி, புகழ், பணம், அதிகாரம் என்றெல்லாம் அலைவது அர்த்தமற்றது என்று நினைக்கிறேன். பெரும்பாலான அரசியல்வாதிகள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சுலபமாக்குவதற்கும், சொகுசாக்குவதற்கும், தம் பெண்டு, பிள்ளைகளுக்கு சம்பாதிப்பதற்காகவும்தானே முனைகின்றனர்? இங்கே யாரால் எதை எப்படி எவ்வளவு மாற்ற முடிகிறது?

[10] முழுமனதுடன் இல்லாமல், முறையான முன்தயாரிப்புக்கள் ஏதுமின்றி, நான் இரண்டு முறை தேர்தல் வேட்பாளராக என்னை முன்மொழிந்தேன். முற்றுமுணர்ந்த மக்கள் என்னை முழுமையாக நிராகரித்தார்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரியும் போராட்டக் களம் வேறு, தேர்தல் அரசியல் வேறு என்பது. எனக்காக உயிரையேவிடத் துணிந்த இடிந்தகரை, கூடங்குளம், கூத்தன்குழி மக்களே தேர்தலில் எனக்கு வாக்களிக்காமல் விட்டது என்னைப் பிடிக்காமல் அல்ல, நானும் அரசியலில் குதித்தது பிடிக்காமல். தேர்தல் அரசியல் ஒரு different ball game என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். போராளிகள் அங்கே பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்று அறிந்தும் வைத்திருக்கிறார்கள் அவர்கள்.

கடந்த 24 ஆண்டுகாலப் பொதுவாழ்வின் காரணமாக வேலை, வருமானம், வசதி வாய்ப்புக்கள், குடும்பம், நல்வாழ்வு, மனஅமைதி என ஏராளமானவற்றை இழந்துவிட்டாலும், அந்த அக்னிப் பரீட்சையில் அழிந்து போகாமல், இன்றளவும் நெடிதுயர்ந்து நிற்பதே மனதுக்கு ஒரு நிறைவைத் தருகிறது. பெருந்தலைவர்களைப் போல எதையும் சாதிக்கவில்லைதான், எந்த வெற்றியையும் பெறவில்லைதான். ஆனாலும் பிழைப்புவாதியாக வாழாமல், கொண்ட கொள்கைகளில் சமரசம் செய்யாமல், ஏழை மக்களை வஞ்சிக்காமல், வாழும் சமூகத்துக்காக குரல்கொடுத்துக் கொண்டிருப்பது பெரும்பேறுதானே?  ஒளவையார் சொல்வது போல,

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

வான்குருவி, கறையான், தேனீக்கள் அருமையாக உருவாக்குகின்ற கூடு, புற்று, தேன்கூடு போன்றவற்றை நம்மால் செய்ய முடியாது. எனவே நானே வல்லவன் என்று பெருமை கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது.

எனக்கு எது எளிதாக இருக்கிறதோ, அதைச் செய்வதிலேயே நான் கவனம் செலுத்துகிறேன்: எழுதுகிறேன், பேசுகிறேன், இடையறாது இயங்குகிறேன். அண்மையில் நடந்த பெருமழைப் பேரிடரின்போது ஓர் அருஞ்சொல் படித்தேன்: “Rain drops may be little in shape and size. But their continuous fall makes a river overflow. Small consistent efforts make massive changes.” சிறு சிறு செயல்களையேத் தொடர்ந்து விதைப்போம். அடுத்துவரும் தலைமுறையினர் அவற்றை வளர்த்தெடுக்கட்டும், அறுவடை செய்யட்டும், அனுபவித்து மகிழட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

சுப. உதயகுமாரன் பதிவுக்கு கிருஷ்ணா என்பவர் தனது முகநூல் பக்கத்தில் விமர்சனப் பூர்வமாக ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது: “தோழர் சுப உதயகுமார் 'ஏன் தேர்தல் அரசியலில் நிராகரிக்கப்பட்டேன்' என்று ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

அனைத்தும் முற்றிலும் உண்மை.

ஆனால், இந்திய துணைக்கண்டத்தோடு ஒப்பீடு செய்கையில் இயல்பாக மற்றும் வரலாற்று ரீதியாக ஒரு முற்போக்கு தன்மை நிலவ வேண்டிய ஒரு மண்ணை 

இழிவான ரசனை கொண்ட, இழிவான நடத்தை கொண்ட, இழிவான தேர்தல் பண்பாடு கொண்ட மண்ணாக மாற்றியதில் திராவிடத்திற்கு பெரும் பங்கு உண்டு.

இது குறித்து 

ஐயா மபொசி முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார், அவர்கள் இங்கே முற்போக்கு பேச காரணமே அது இங்கே வெகுவாக போனியாகும் என்பதால்தான்' என்பார்.

இந்த கும்பல் வடக்கே அவதரித்து இருந்தால் பாபர் மசூதியின் மீதான முதற் கடற்பாறை இவர்களுடையதாகத்தான்  இருந்திருக்கும். உங்களை போன்றவர்களை ஏற்காததற்கும், உங்களைப் போன்றோரின் அருமை புரியாததற்கும் மக்களின் மலிவான சமூக அரசியல் ரசனையும், பிரக்ஞய்யுமே காரணம்.

 

அதனை தோற்றுவித்தது திராவிடம். அது தமிழர் வரலாற்றில் இப்போதும் நிகழும் மிகப்பெரும் துர்பாக்கியம். அதைத்தான் எதிர்த்து நாமெல்லோரும் போராடுகிறோம், போராட வேண்டும்.

ஆக, என்னைப்பொறுத்தவரை உங்கள் பின் மக்கள் தொடர்ந்து திரளாமல் போக மிக முக்கிய காரணிகளுள் ஒன்றாக இருக்கிறது ''திராவிடிய தமிழ்க் கொடை''

அதை லேசுபாசாக நீங்கள் தொட்டு செல்வது உங்கள் அறியாமையா, பலவீனமா என தெரியவில்லை. நீங்கள் இனி புதிதாக அறிந்துகொள்ள ஏதுமில்லை, அது பலவீனம்தான்.

மற்றபடி, புதிதாக மலரும் தமிழ்த் தேசிய கட்சிகளை இதில் இழுத்து பூச்சாண்டி போல காட்டுவது அவரது  ஒவ்வாமைதான். கருவாகிக்கொண்டு இருக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளை விமர்சிக்கலாம்தான், ஆனால் அதையே விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் சென்சிடிவ்வாக இருப்பதை ஒப்பீடு செய்யும் போது உங்களது திராவிட எதிர்ப்பு என்பது பலநூறு மடங்கு கூடுதலாக இருந்திருக்க வேண்டும்.

அதாவது  கம்யூனிஸ்ட்டுகள் குறித்து குறிக்கும்போது அண்ணல் அம்பேத்கர் சொல்வார் அல்லவா தன்னுடைய ' destined and implacable enemy' என்று அதுபோல.

எனது பரம்பரை எதிரி 'திராவிடம் என பேரறிவிப்பு செய்திருக்க வேண்டும் தோழர் சுப உதயகுமார்.

மேலும் மிக முக்கியமாக, பாஜக VS காங்+திராவிடம் தேர்தலை பாசிசம் Vs Narcissm என வரையறுக்கிறார். அதில் தான் Narcissm'த்தை தேர்ந்தெடுப்பதாக சொல்கிறர்.

உலக சமூக அறிவியல் எல்லாம் பயின்ற சுப உதயகுமார், உண்மையை தனக்கு ஏதுவாக திரிக்கிறார், அவருக்கு தெரியாமல் இல்லை.

பாசிசம் என்பது ideology; அவர்களின் (பாசிஸ்ட்களின்) internal சைக்காலஜிதான் Narcissm. இரண்டும் வேறல்ல.

 

உலக தத்துவங்களை வளைத்தும், தமிழ்த் தேசிய பூச்சாண்டியை ஏவியும் தனது திராவிட பக்கசார்பை நியாயப்படுத்த முயல்கிறார்.

பெரும்பாலான வேளைகளில் தோழர் சுப உதயகுமார் தமிழ்த் தேசிய தோழர்களால் தாக்கப்படுவது அவருடைய திராவிட மென்போக்கால்தான் என்பதை அட்ரஸ் செய்ய மறுக்கிறார்.



மாறாக, தோழர்களை குண்டர்கள் போல சித்தரிக்க முயல்கிறார். மற்றபடி, தோழரின்  அறிவார்ந்த விவாதங்கள், விளக்கங்கள் எதிர்கால இளைய தலைமுறையை பட்டை தீட்டட்டும். என்னை பொறுத்தவரை சுப உ எப்போதோ வென்று விட்டார், கொள்கைக்காக மக்கள் திரள் எப்போதும் அவர் பின்தான் நின்றது. 

பிகு: 

அவர் குறிப்பிடும் அவருடைய பிரியமான அந்த மூன்று தம்பிகள் யார். தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் :))” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு சுப. உதயகுமாரன் பதில் அளித்து பதிவிட்டிருப்பதாவது: “அதற்கான என்னுடைய பதில் இது:

என்னுடையது திராவிட மென்போக்கு என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள், தம்பி. சிறுவனாக இருந்தபோது அப்பாவின் கட்சி என்பதால் திமுகவை ஆதரித்தேன். ஆனால் அரசியல் முதிர்ச்சி வந்த நாளிலிருந்து விமரிசனத்தோடுதான் பார்த்தேன். எப்போது திமுக பாஜகவோடு கூட்டணி வைத்தார்களோ, அப்போதிலிருந்தே திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறேன். பல கட்டுரைகள், ஓர் ஒரங்க நாடகம் போன்றவற்றை எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் நிலவும் political decadence லிருந்து நம்மை மீட்டெடுக்க திராவிட அரசியலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறேன்.

திராவிட அரசியல் பிறந்து, வளர்ந்து, கோலோச்சிய நூற்றாண்டு காலக்கட்டத்தைக் கடந்து செல்ல, காத்திரமான ஓர் இயக்கமும், உண்மை, நேர்மை, ஒழுக்கம், சனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் போன்ற விழுமியங்கள் கொண்ட தோழர்களும் தேவைப்படுகிறார்கள். உங்களைப் போன்ற இளைஞர்கள் களத்துக்கு வந்து செய்யவேண்டிய வேலை இது. ஆனால் நீங்களோ திராவிட அரசியல் கலாச்சாரத்தின் அதே தனிநபர் துதி, அதிகார வெறி, ஊழல், ஊதாரித்தனம், ஒழுக்கமின்மை, வாய்ச்சொல் வீரம் போன்ற அம்சங்களோடு அதே புளித்துப்போன பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றி, வேறு லேபிள் ஒட்டி, நம்மையும், ஊரையும் ஏமாற்றிக் கொள்வோம், வாருங்கள் என்கிறீர்கள். அங்கேதான் நாம் முரண்படுகிறோம்.

தனியொருவரை அல்ல தமிழர்களை மையப்படுத்துவோம் என்கிறேன். எதிரியையே குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட, நம் வீட்டை நாம் சுத்தப்படுத்துவோம் என்கிறேன். முடிவு (End) மட்டுமல்ல, வழியும் (means) முக்கியம் என்கிறேன். வெறுப்பைக் கக்கி ஒரு நூறு ஆண்டுகள் நாம் அரசியல் செய்தாலும், ஒப்பற்ற ' அன்பு ' எனும் விழுமியத்தை உலகுக்கு அளித்த தமிழர்கள் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள் நம்மை.

பெரியார், திக, திமுக, அதிமுக  preoccupation-லிருந்து வெளியே வருவோம் என்கிறேன். ல, ள, ழ, ர, ற எனும் ஒலிகளை ஒழுங்காக உச்சரிக்கக்கூடத் தெரியாத நாம், வெறுமனே மொழிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழனை இன்னும் கூலியாகவேப் பார்க்கிறது உலகச் சமுதாயத்தின் சில பகுதிகள். ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து நாம் என்ன சாதித்துவிட்டோம்? எதுவும் கிடையாது! தமிழ்நாட்டு நிலங்கள், வளங்கள் எல்லாம் கூறுபோட்டு கொள்ளையடிக்கப் படுகின்றனவே, என்ன செய்ய முடிந்தது நம்மால்? இன்னோரன்ன பிரச்சினைகள் குறித்து தமிழ்நாட்டில் எத்தனை பேரை விழிப்புணர்வு அடையச் செய்தோம்?

வெறுமனே முகநூலில் வெறுப்பை, கோபத்தை, வன்மத்தை, இயலாமையை கொப்பளிக்கிறோம். ஒரு தெளிவான  செயல்திட்டத்தோடு பத்து பேரிடம் பேசியிருக்கிறோமா? பத்து வீடுகளுக்குப் போயிருக்கிறோமா?

நம் தமிழன்னைக் கோவிலுக்கான கோபுரத்தை நம் மக்களோடு கைகோர்த்து கீழே இருந்துதான் மேல்நோக்கி கட்டியெழுப்ப வேண்டும். ஆட்சி அதிகாரம் பெற்று, ஒரே ஒரு கையெழுத்துப் போட்டு,  மேலேயிருந்து கீழ்நோக்கி கட்டிக்கொண்டு வரமுடியாது.

உங்களைப் போன்ற hundred thousand young men and women (Vivekananda சொன்ன மேற்கோள் நினைவுக்கு வருகிறது) (மாவட்டத்துக்கு 3,000 பேர்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஊர், ஊராக அலைந்து, வீடு வீடாகச் சென்று, நம் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், மொழி, இயற்கை, அரசியல், வருங்காலம் போன்றவை பற்றி மக்களிடம் பேசி, அவர்கள் பேசுவதைக் கேட்டு, அளவளாவி, அவர்கள் தருவதை உண்டு, அவர்கள் மத்தியில் உறங்கி, உழைக்க அணியமாக இருக்கிறோமா? Кришна Кумар” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SP Udhayakumaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment