திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா பகுதியில் சிப்காட் திட்டத்துக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், கைதாகி குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருள் ஆறுமுகத்தை அணு உலை எதிர்ப்பு போராளி சுப. உதயகுமாரன் சந்தித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா பகுதியில் சிப்காட் திட்டத்துக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், அருள் ஆறுமுகம் உள்பட 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதில் விவசாயிகள் சங்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அருள் ஆறுமுகம் தவிர மற்ற 6 பேர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படு என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அருள் ஆறுமுகம் போராட்டத்தை தூண்டிவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறினார். அருள் ஆறுமுகம் ஐ.டி பணியை விட்டுவிட்டு விவசாயம் செய்து வருவதாகக் கூறப்பட்டது.
செய்யாறு மேல்மா பகுதியில் அருள் ஆறுமுகத்துக்கு விவசாய நிலம் உள்ளதாகவும் விவசாயிகளின் அழைப்பின் பேரிலேயே போராட்டத்தில் கலந்துகொண்டதாகவு விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், மேல்மா சிப்காட்டுக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருள் ஆறுமுகத்தை அணு உலை எதிர்ப்பு போராளி சுப. உதயகுமாரன் சந்தித்துள்ளார்.
அருள் ஆறுமுகத்தைச் சந்தித்தது குறித்து சுப. உதயகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பாளையங்கோட்டை சிறையினிலே
பாம்புகள், பல்லிகள் நடுவினிலே...
அஞ்சாமல் இருக்கும் தோழர் அருள் ஆறுமுகம் அவர்களை இன்று காலையில் சந்தித்துப் பேசினேன். நல்ல உடல் நலத்துடனும், மனநலத்துடனும் இருக்கிறார்.
நெல்லை வழக்குரைஞர் ஜி. ரமேஷ் அவர்கள், தூத்துக்குடி வழக்குரைஞர் மாடசாமி அவர்கள், மக்கள் கண்காணிப்பகம் வழக்குரைஞர் ஹென்றி டிபென் அவர்கள் மற்றும் தோழர்கள் என தேர்ந்த வல்லுனர்கள் தோழருக்கு உதவுகின்றனர்.
ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான பணம் புரளும் திட்டங்களால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் போன்ற குரலற்றவர்களுக்காக நீங்கள் எழுந்து நின்றால், ஏனென்று கேட்டால், நீங்களும் குண்டர் ஆவீர்கள். மாநிலத்தின் இன்னொரு மூலையிலுள்ள சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தார் துன்புறுத்தப்படுவார்கள்.
இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பெருமை அடைவீர்கள். மகிழ்ச்சியும், மனநிறைவும் உங்களை வந்தடையும். இயற்கைத் தாய் உங்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வாள்.
ஆனால், எவ்வளவு கொள்ளையடித்தாலும் நிறைவடையாத பணவெறியர்கள், கார்ப்பரேட் கைக்கூலிகள், அரசியல் முதலாளிகளுக்காக உழைக்கும் அற்பர்கள், மக்கள் விரோதிகள் தோற்பார்கள், மிக மோசமாகத் தோற்பார்கள், அவர்கள் சந்ததிகள் அழிந்து போவார்கள்.
கவலற்க, தோழர்களே, தமிழர் வேதம் சொல்கிறது:
"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்"
"என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்" (முவ உரை).” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.