கோவை மாவட்டத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை, கொரோனா தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் மனு அளித்தனர்.
அந்த மனுவில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் முதல் அலையின் போது அதிமுக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “கிருமிநாசினிகளை பரவலாக தெளிப்பது பயனுள்ளதாக இருந்தது. காற்றில் பத்து மீட்டர் வரை செல்வதாக கண்டறியப்பட்ட வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருந்தது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில், தொடர்பு கண்காணிப்பில் களத்தில் ஊழியர்க்ளின் பணிகளைக் கண்காணிப்பதற்கும், இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் ஒரு அதிகாரி பொறுப்பாளராக நியமிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தற்போது இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக இருக்கும் திறனைவிட மாவட்டத்தில் கொரோனா இறப்புகள் அதிகரித்துள்ளன என்று எஸ்.பி.வேலுமணி சுட்டிக்காட்டினார். மேலும், மருத்துவ ஆக்ஸிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகளின் தேவையை கருத்தில் கொண்டு மருத்துவ ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ.க்கள், அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவச உணவு வழங்க அரசாங்கத்திடம் அனுமதி கோரினர். அதிமுக ஆட்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, “அம்மா உணவகங்களில் 3 மாதங்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டது. அதனால், இப்போதும் அதே போல, இலவச உணவு வழங்க வேண்டும் அல்லது எங்களுடைய கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதைச் செய்ய அனுமதி வழங்க வேண்டும் அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்” என்று கூறினார்கள்.
மேலும், கருப்பு பூஞ்சை எனபடுகிற்மியூகோர்மைகோசிஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க போதுமான அளவு மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும், இந்த நோய்க்கு முதல்வரின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக தடுப்பூசி போட வேண்டும் என்றும் வேலுமணி தமிழக அரசை வலியுறுத்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.