அமைச்சர் கே.என். நேரு, எடப்பாடி பழனிசாமி குறித்து தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக, எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து, அமைச்சர் கே.என். நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், அ.தி.மு.க பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தி.மு.க.வுக்கு எதிரான தீர்மானங்களில் கண்டனம் என்றும், மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களில் வலியுறுத்தல் என்றும் குறிப்பிட்டு பா.ஜ.க பாசத்தை இ.பி.எஸ் வெளிப்படுத்துவதாக கே.என்.நேரு தெரிவித்து இருந்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, ஆளுநர், ரெய்டு, சின்னம் பறிபோய்விடுமோ என்று எடப்பாடி பழனிசாமியின் பயப்பட்டியல் சீனப் பெருஞ்சுவர் போல நீள்வதாகவும் அமைச்சர் கே.என். நேரு கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், கே.என். நேருவின் கருத்திற்கு எஸ்.பி. வேலுமணி தற்போது எதிர்வினையாற்றியுள்ளார். குறிப்பாக, அ.தி.மு.க.வின் தீரமிகு எழுச்சியால் அச்சமடைந்து கே.என். நேரு அறிக்கை வெளியிட்டதாகவும், அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க தைரியம் இல்லாமல் தனிமனித தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“