கோவையில் நடைபெறும் கனிமவள கொள்ளையை கண்டித்து அடுத்த ஒரு வாரத்திற்குள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
வருகிற நாடளுமன்ற தேர்தலின் ஆயத்தமாக கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இதே போல், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி சர்பில் அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் சங்கனூர் பகுதியில் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி,தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி இரண்டு மணி நேரம் பேசியும் அது வெளியே வரவில்லை எனவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுவிட்டது எனவும் குற்றம் சாட்டினார். கோவையில் நீதிமன்றத்திலேயே விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்டும் நீதிமன்றத்திற்கு வந்த பெண் மீது ஆசிட் வீச்சு நடைபெற்று அப்பெண் இறந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு அதிகமான கனிம வள கடத்தல் இருந்து வருவதாகவும் தினசரி நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் லோடு கனிம வளங்கள் கடத்தப்பட்டும் திமுக அரசு அதனை கண்டுகொண்டாமல் இருப்பதாக கூறியதுடன் திமுகவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் அதிகமாக லஞ்சம் பெற்று கனிமங்களை விற்றுக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக எந்த திட்டத்தையும் செய்யவில்லை என்றும் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களையும் மெதுவாக செய்து வருவதாகவும் கூறியதுடன் கோவையை புறக்கணிக்கும் திமுக அரசை மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் புறக்கணிப்பார்கள் என்றும் தெரிவித்தார். கனிமவள கொள்ளை தொடர்பாக சட்டமன்றத்திலேயே அ.தி.மு.க சார்பில் கடுமையாக பேசியுள்ளோம் எனவும் அடுத்த ஒரு வார காலத்திற்குள் இது தொடர்பாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
தற்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் லஞ்சம் நிலவுவதாகவும் எந்தெந்த துறைகளில் எப்படி பணம் வாங்குகிறார்கள் என ஊடகங்கள் வெளிக்கொண்டு வருவதில்லை எனவும் ஊடகங்களை மிரட்டி எந்த தகவலும் வெளிவருவதில்லை எனவும் கூறினார்.மேலும் 12 மணி நேர வேலை சட்டத்தை போட்டதே தவறு., ஆனால் அதை திரும்ப பெற்று அதனை சாதனை என்று கூறி வருகிறார்கள் என கூறிய எஸ் பி வேலுமணி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் எதிர்த்த பிறகு அந்தத் திட்டத்தை வாபஸ் பெற்றதை சாதனையாக கூறுவது தான் வேதனையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.