scorecardresearch

சோதனை மேல் சோதனை… எஸ் பி வேலுமணி அடுத்தடுத்து சந்திக்கவுள்ள வழக்குகள் இவை தான்!

Former minister S P Velumani latest news in tamil: ‘ஒப்பந்தம் ஒதுக்குவதாக ஏமாற்றியது மற்றும் அதிக விலை கொடுத்து எல்இடி விளக்குகள் வாங்கியது’ தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவை விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sp Velumani Tamil News: Velumani has to battle 2 more pending corruption complaints

Sp Velumani Tamil News: கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி அவரது பதவியை தவறாக பயன்படுத்தி ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ் பாரதி தமிழக ஊழல் தடுப்பு பிரிவில் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சரை விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை, அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தொடர்புடைய 60 இடங்களில் அதிரடி சோதனையை நடத்தி வருகிறது.

மேலும் கோவை, சென்னை, திண்டுக்கல் எனப் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை, படிப்படியாக முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. தவிர எஸ்.பி. வேலுமணியின் கோவை வீட்டிலிருந்து கட்டுக்கட்டுக்காக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பெட்டகச் சாவியையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒப்பந்தம் ஒதுக்குவதாக ஏமாற்றியது மற்றும் அதிக விலை கொடுத்து எல்இடி விளக்குகள் வாங்கியது என மேலும் இரண்டு வழக்குகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவை விரைவில் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகளை தமிழக சட்டசபை சபாநாயகர் எம் அப்பாவும், காண்ட்ராக்டர் திருவேங்கடமும் அளித்திருந்தனர்.

தமிழக சட்டசபை சபாநாயகர் எம் அப்பாவு அவரது புகாரில் மாநிலம் முழுதும் எல்இடி விளக்குகள் வாங்குவது தொடர்பாக பல கோடிகள் ஊழல் நடந்துள்ளது என்றும், சந்தையில் ரூ .450 மதிப்புள்ள எல்இடி விளக்குகள் ரூ. 3,737 க்கும், ரூ.1,550 மதிப்புள்ள விளக்குகள் தலா ரூ .14,919 க்கும் வாங்கப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த புகாரில்,”கடந்த 2015 முதல் 2018 வரை மூன்று கட்டங்களாக ஒதுக்கப்பட்ட ரூ .969 கோடியில், ரூ .400 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. 14 வது நிதி ஆணையத்திலிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து ரூ. 300 கோடி, மாநில நிதி ஆணையம் மற்றும் மூலதன மானிய நிதி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் இருந்து ரூ. 200 கோடி என சுமார் 900 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இது தவிர, சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ .69.3 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.

பஞ்சாயத்து ராஜ் முறையின்படி, யூனியன் நிதி ஆணையத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை சம்பந்தப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். கிராம பஞ்சாயத்துகளின் நிதி அதிகாரத்தை நிர்வகிப்பதில் மாநில அரசோ அல்லது எந்த இரண்டாம் தரப்பு அதிகாரமோ தலையிட முடியாது.” என தெரிவித்துள்ளார்.

“அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் குழுவை அமைப்பதன் மூலம், கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரங்களை அபகரித்து, தனது ‘பினாமி மற்றும் ஷெல் நிறுவனங்களுக்கு’ டெண்டர்களை ஒதுக்க முடிந்தது,” என அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூலை 15, 2020 அன்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சமர்க்கப்பட்ட இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அப்பாவு எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். இருப்பினும், ஏப்ரல் 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அவர் சட்டசபை சபாநாயகர் ஆனதால், தனது உயர்நீதிமன்ற மனுவை திரும்பப் பெற்றார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் காவல் ஆணையரைச் சந்தித்த காண்ட்ராக்டர் திருவேங்கடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும் அவரது உதவியாளர் மீதும் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை கடந்த 2002ம் ஆண்டு முதல் தனக்கு தெரியும் என்றும், 2016ம் ஆண்டு தனக்கு மாநகராட்சியின் சிவில் ஒப்பந்தங்களை ஒதுக்குவதாக உறுதியளித்தார் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக எஸ்.பி வேலுமணி தன்னிடமிருந்து ரூ .1.25 கோடியை முன்கூட்டிய கமிஷனாக பெற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த புகாரில், “முன்னாள் அமைச்சருக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் 2016ம் ஆண்டு மார்ச்சில் ரூ .1 கோடியும், ஜூலையில் ரூ. 20 லட்சமும் கொடுத்தேன். மேலும் அவரது தனிப்பட்ட உதவியாளருக்கு ரூ .5 லட்சம் கொடுத்தேன். வாக்குறுதியளித்தபடி எந்த ஒப்பந்தமும் எனக்கு வழங்கப்படாததால் எனது பணத்தை திரும்ப கேட்டேன். ஜூலை மாதம், இது தொடர்பாக வேலுமணியை சந்தித்தபோது, மீண்டும் பணம் கேட்டால் என்னை ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்குவேன் என மிரட்டினார்” என்று காண்ட்ராக்டர் திருவேங்கடம் தெரிவித்துள்ளார்.

திருவேங்கடம் கொடுத்துள்ள இந்த புகார் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவுக்கு (சிசிபி) அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sp velumani tamil news velumani has to battle 2 more pending corruption complaints